கடைசி நோயாளியையும் குணப்படுத்திய துபாய்... நெகிழ்வுடன் விடை பெற்ற ஜப்பானியர்!

0 9088

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், அமீரகத்தில் கொரோனா பரவும் வேகம் குறைய தொடங்கியுள்ளது. அமீரகத்தில் 52, 600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது . இதில், 41 , 714 பேர் குணமடைந்தனர். 326 பேர் பலியாகினர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக துபாய் வர்த்தக மையத்தில் சிறப்பு மருத்துவனை அமைக்கப்பட்டிருந்தது. 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 279 மருத்துவர்கள், 200 தன்னார்வலர்கள், செவிலியர்கள் பணி புரிந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது.

இங்கு, 3000 பேர் சிகிச்சை பெற முடியும். இந்த மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளிகள் கொரோனாவிலிருந்து குணம்  பெற்ற நிலையில், ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஃபூஜிதா என்பவர் மட்டும் சிகிச்சையிலிருந்தார். இவரும் குணமடைந்ததால், டாக்டர்கள், செவிலியர்கள் அவரை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பினர். இதையடுத்து, துபாய் வர்த்தக மையத்தில் செயல்பட்டு வந்த கொரேனா நோய் மருத்துவமனை மூடப்பட்டது. விடைபெறும் போது பேசிய ஃபூஜிதா , 'ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ வேண்டும். தற்போது, நான் நல்லபடியாக உணர்கிறேன் ' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் அமீரகத்தில் நாள் ஒன்றுக்கு 900 பேருக்கு கொரோனா பரவி வந்தது. இப்போது, கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துவிட்டது. தற்போதும் அமீரகத்தின் மற்ற நகரங்களில் கொரோனா நோயாளிகள்  சிகிச்சையில் உள்ளனர். வீட்டிலும் சிலர் சிகிச்சையில் இருக்கிறார்கள். கடைசி நோயாளி குணமடைந்துவிட்டதால், துபாய் வர்த்தக மையத்தில் இந்த சிறப்பு மருத்துவமனை மூடப்பட்டாலும் , எப்போதும் வேண்டுமானாலும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயின் கோவிட் -19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் அமர் ஷெரீப் கூறுகையில், ''மருத்துவமனையில் கடைசி நோயாளியை முழுமையாக குணப்படுத்தியது அரசு மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் சமூகத்தின் அர்ப்பணிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மருத்துவனை மூடப்பட்டாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் திறக்க தயார் நிலையிலேயே உள்ளோம் ''என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று முதல்  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments