குறைந்த விலைக்கு தங்கம் தொழிலதிபரிடம் ரூ 22 லட்சம் மோசடி பிரபல மோசடி மன்னன் கைது

0 2256

பெரம்பலூரில் சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து குறைந்த விலையில் தங்க நகை வாங்கி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் 22 லட்ச ரூபாய் மோசடி செய்த பிரபல மோசடி மன்னன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ரியல் எஸ்டேட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வரும் பெரம்பலூர் மேற்கு ரோஸ் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் நிக்கல்சன் என்பவர் மூலம், எசனை பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ் என்பவன் அறிமுகமாகியுள்ளான்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ரவிச்சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த போது 43 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகளை, திருச்சியில் தனக்கு தெரிந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து 38 லட்ச ரூபாய்க்கு வாங்கித் தருவதாகக் கூறி சுரேஷ் ஆசை காட்டியுள்ளான். அதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரனும் முன்பணமாக 18 லட்ச ரூபாயை நேரடியாகவும், 2 லட்ச ரூபாயை வங்கி பரிவர்த்தனை மூலமும் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.

அதற்கு மறுநாளே ரவிச்சந்திரனுக்கு போன் செய்த சுரேஷ், அவர் கொடுத்த பணத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் இருப்பதாகக் கூறி மேலும் 2 லட்ச ரூபாயை மிரட்டி பெற்றுள்ளான். தொடர்ந்து 52 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் நகைகளை பெற முடியும் எனக் கூறி மேலும் 32 லட்சம் பணம் கேட்டுள்ளான்.

அதற்கு தனக்கு நகை வேண்டாம் எனவும், தன்னிடம் வாங்கிய 22 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துவிடுமாறும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால் ரவிச்சந்திரன் தன்னிடம் கொடுத்த பணத்துக்கு ஆதாரம் இல்லை என கூறிய சுரேஷ், பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்தால் சுங்க அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்து விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளான்.

இதனால் சுரேஷ் மீது நடவடிக்கை கோரி ரவிச்சந்திரன் ஆன்லைனில் புகார் தெரிவித்த நிலையில், தன்னை காரில் கடத்தி வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டதாக ரவிச்சந்திரன் மீது சுரேஷ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளான்.

அதன் பேரில் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ரவிச்சந்திரன் மீண்டும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 22 லட்சம் ரூபாயை மோசடி செய்தாக வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது நண்பர் நிக்கல்சன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

மோசடியில் ஈடுபட்ட பிரபல மோசடி மன்னன் சுரேஷ் மீது பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திருச்சி, சென்னை, உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தது, ஆள்கடத்தல், வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments