ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0 2170
ஜூலை 15க்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - மத்திய அரசு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்துகின்றன. தவறான மற்றும் ஆபாச இணைய தளங்களை மாணவ-மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரியும், 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு முற்றாக தடை கோரியும், 6ஆம் வகுப்புக்கு மேல் 2 மணி நேரம் மட்டுமே வகுப்புக்கள் நடத்த உத்தரவிட கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில், ஆன்லைன் வகுப்புகளுக்கான செல்போன், லேப்டாப், கணினி பயன்பாட்டால், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு கண் மருத்துவமனை டீன் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது, ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் தெரிவித்தார். எனவே, வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, விசாரணை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments