சென்னையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு..!

0 6281
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் தளர்வுகள்

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 19ந் தேதி தொடங்கிய முழு ஊரடங்கு நேற்று வரை நீடித்தது. இதையடுத்து, இன்றுமுதல் வாகனப் போக்குவரத்து, கடைகள் திறப்பு ஆகியவற்றில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும் என்றும், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி சாலையில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த தடுப்புகளைப் போலீசார் நேற்று இரவே நீக்கிவிட்டனர்.

இன்று முதல் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு சென்னை நகரம் திரும்பத் தொடங்கியுள்ளது.
பெட்டிக்கடைகள், டீக்கடைகள் காலையில் திறக்கப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டாலும், பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கும் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மூடப்பட்டிருந்த காய்கறி மளிகைக்கடைகளும் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள்,சலூன்கள், பியூட்டி பார்லர்கள், உள்பட அனைத்துக் கடைகளும் இன்று மாலை 6 மணி வரை செயல்படவும் அரசு அனுமதியளித்துள்ளது.50 சதவீத பணியாளர்களுடன் ஏசியை இயக்காமல் செயல்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவும் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இன்று முதல் வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், டாக்ஸிக்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பயணிகளும் வாடைக்கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பேரும் பயணிக்கலாம். தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் சிறிய கோவில்கள், மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோவில்களைத் திறக்கலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.ஆயினும் இந்த நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆயினும் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ஆடித்திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையிலான பணி இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாரத்துக்கு 6 நாட்கள் பணி என்ற முந்தைய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. அதன்படி அரசுத் துறைகளில் உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.முதல் பிரிவினர் வாரத்தின் முதல் 2 நாட்களும், 2வது பிரிவினர் அடுத்த இரு நாட்களும் என தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றவுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், துறைத் தலைமை அதிகாரி அனுமதியின்றி யாரும் வெளியூர்களுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments