கான்பூர் படுகொலை.. காவல் அதிகாரி உடந்தை..!

0 7573

கான்பூர் ரவுடி விகாஸ் துபேயைக் காவல்துறையினர் கைது செய்யச் சென்றது குறித்து அவனுக்கு முன்கூட்டித் துப்புக் கொடுத்த காவல் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. படுகொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்தது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பிகாரு என்னும் ஊரில் அறுபதுக்கு மேற்பட்ட கொலை, ஆட்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே என்பவனைக் கைது செய்யக் காவல்துறையினர் சென்றனர். இரவில் வீட்டைச் சுற்றி வளைத்ததும் மாடியில் இருந்த விகாஸ் துபே துப்பாக்கியால் காவல்துறையினரைச் சரமாரியாகச் சுட்டதில் டிஸ்பி, எஸ்ஐக்கள், காவலர் என 8 பேர் உயிரிழந்தனர்.

விகாஸ் துபே வேறு மாநிலத்துக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் அவன் கூட்டாளியான தயா சங்கர் அக்னிஹோத்ரி என்பவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரித்ததில், காவல்துறையினர் பிடிக்கச் சென்றது குறித்துக் காவல்நிலையத்தில் இருந்து விகாஸ் துபேக்குச் செல்பேசியில் அழைப்பு வந்ததாகவும், இதையடுத்துக் கூட்டாளிகள் 30 பேரை அவன் உதவிக்கு வரவழைத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விகாஸ் துபேயின் செல்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் அவனுடன் காவல்துறையினர் 20 பேருக்குத் தொடர்புள்ளதும், சவுபேபூர் காவல்நிலையத்தில் இருவர் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல் அதிகாரி வினய் திவாரி என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விகாஸ் துபேயைக் கைது செய்ய மேலிடத்தில் இருந்து நெருக்குதல் கொடுப்பதாகவும் வினய் திவாரி அவனிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் மின்கம்பி சேதமடைந்துள்ளதாகத் தொலைபேசியில் கூறித் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தையும் துண்டித்துள்ளனர். இது ரவுடிகள் தாக்குதல் நடத்தவும் தப்பிச் செல்லவும் உதவியாக இருந்துள்ளது. மின்சாரத் துண்டிப்புக்கான சதிச் செயலைச் செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments