வாகன சோதனையும் போலீஸ் ரோதனையும்..! சாலையோரம் மயங்கிய பெண்

0 11753

சென்னை மணலியில் இருசக்கரவாகனத்தில் தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞரின் இருசக்கர வாகனம், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் சாலையோரம் மயங்கி சரிந்தார். நீண்ட நேரமாக ஆம்புலன்சு வராததால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கரவாகனத்தை திருப்பிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.  

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறையினர் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியுள்ளனர். அனாவசியமாக வாகனத்தில் சென்றால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கின்றது.

அந்தவகையில் மணலி பஜாரில் சனிக்கிழமை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மறித்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், அவரிடம் உரிய அடையாள அட்டை இல்லாததால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த இளைஞர், தனது தாயை மருத்துவமனை அழைத்து செல்வதாக கூறியும் போலீசார் கேட்கவில்லை. இளைஞரின் வாகனம் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் தாய் சாலையோரம் மயங்கிச் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு 1 மணி நேரம் வரை காத்திருந்த நிலையில் ஆம்புலன்சு வராததால் அந்த இளைஞரும், அவருக்கு ஆதரவாக களம் இறங்கிய உள்ளூர் இளைஞர்களும் அந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வளைத்து வளைத்து வீடியோ எடுத்தனர்

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அந்த இளைஞரிடம் பறிமுதல் செய்த இரு சக்கர வாகனத்தை மீண்டும் அங்கு கொண்டு வர செல்போன் மூலம் உத்தரவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார் காவல் உதவி ஆய்வாளர்.

ஆனால் அந்த இளைஞரோ தனது தாய் உட்கார முடியாமல் படுத்து விட்டதால் ஆம்புலன்சை விரைவாக வரசொல்லுங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த களேபரத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடத்தொடங்கியது, இதனால் கொரோனா பரவும் கலைந்து செல்லுங்கள் என்று பாதுகாப்புக்கு நின்ற காவலர் அறிவுறுத்திய நிலையில் அவரிடமும் நியாயம் கேட்க ஆரம்பித்தனர் இளைஞர்கள்.

அந்த இளைஞரையும் அவரது தாயாரையும், கூடியிருந்த இளைஞர்களையும் சமாதப்படுத்துவதற்குள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தவித்து போனார்.

இது போன்ற நெருக்கடியன நேரங்களில் வாகனச்சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் நிலைமையின் தன்மையை உணர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எந்திரம் போல செயல்பட்டால் என்னமாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments