தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு..!

0 9772

மிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர, அத்தியாவசியக் கடைகள் உட்பட மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கம் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டதை போன்ற தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலுமே தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதலாவது ஞாயிறான இன்று அனைத்து மாவட்டங்களிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து அத்தியாவசியக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்து காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

சென்னை

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேவையின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிக்கு தேவையின்றி வருவோரை நவீன எலக்ட்ரிக் பைக்குகள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், தெருக்கள் அனைத்தும் ஆள்நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையே செவிலிமேடு பகுதியில் தடையை மீறி செயல்பட்டு வந்த தெருவோர மீன் கடைகளை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள், மீன்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு 

செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் 11 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. எல்லைகளையும் மூடி சீல் வைத்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மாவட்ட எல்லையை கடக்கும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கோவை 

தளர்வற்ற முழு ஊரடங்கினால் கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மருந்தகங்கள், மருத்துவமனை, பால் நிலையங்கள் செயல்படுகின்றன. 12 சோதனைச் சாவடிகள் உட்பட நகரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

சேலம் 

தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவால் சேலம் மாவட்டம் முழுவதும், மருந்தகங்கள், பால் நிலையங்கள், மருத்துவமனைகள் தவிர்த்து பிற வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஏதும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் 

முழு ஊரடங்கால் கடலூர் மாவட்டம் விருதாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை

மதுரையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வில்லாபுரம், அவனியாபுரம், விமான நிலைய சாலை, திருப்பரங்குன்றம், திருநகர், பெருங்குடி ஆகிய பகுதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உசிலம்பட்டி பகுதியில் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். 

கடலூர் 

முழு ஊரடங்கால் கடலூர் மாவட்டம் விருதாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி

திருச்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கால் பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அனைத்துவித கடைகளும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சாலைகளின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ள போலீசார், அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள், வாகன போக்குவரத்து, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உடுமலைபேட்டையில் மத்திய பேருந்து நிலையம், கச்சேரி வீதி உட்பட அனைத்து பகுதிகளும் ஆள் அரவமின்றி காணப்பட்டன.

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையின்றி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். ஓசூரில் தேவையின்றி வெளியே வந்தவர்களை மடக்கி நிறுத்திய போலீசார், அவர்களை பல மணி நேரம் காக்க வைத்து அனுப்பினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து பெருமளவு குறைந்து காணப்பட்டது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். பால் நிலையங்கள், மருந்தகங்களை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கும்பகோணம், பாபநாசம், திருவிடை மருதூர் ஆகிய பகுதிகளிலும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருவாரூர் 

திருவாரூர் மாவட்டத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கால் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லை 

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நெல்லை டவுண், சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

24 மணி நேரமும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெறும், தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரையிலும் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரூர் 

கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments