கொம்பன்ஸ் பரிதாபம் சாதா கைதிகளை கண்டு அஞ்சிய போலீஸ் கைதிகள்..! மதுரை சிறைக்கு மாற்றம்

0 32217

சாத்தான்குளத்தில் தந்தை மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்ட 5 போலீஸ் கைதிகளும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். காக்கி சீருடையில் கொம்பனாக வலம் வந்தவர்கள் சாதாரண கைதிகளுக்கு பயந்து மதுரைக்கு இடம் பெயர்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சாத்தான்குளத்தில் தந்தை மகனான வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களாக இருந்த ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலராக இருந்த முருகன், காவலராக இருந்த முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட 5 பேரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள சிறையில் 15 நாள் காவலில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டனர். பெரிய ஹால் போல் காணப்பட்ட சிறையில் தனிப்பட்ட வசதிகள் இன்றி அனைத்து கைதிகளுடனும் இருந்துள்ளனர். இந்த சிறையில் மொத்தம் 130 கைதிகளை அடைக்க இயலும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த போலீஸ் கைதிகள் 5 பேரையும் சேர்த்து அங்கு 59 பேர் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு காக்கி சீருடையில் கையில் இரும்பு பைப்புடன் கொம்பன் போல ஊருக்குள் கெத்தாக வலம் வந்த 5 பேரும் போலீஸ் சீருடையை கழட்டியதும் தங்களது எதிர்கால வாழ்க்கையை நினைத்து கலங்கி தவித்து வருவதாக கூறப்படுகின்றது. காவல் நிலையத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சேவகம் செய்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் கூட துணைக்கு இல்லாததால் ரகு கணேஷ் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் , முருகன், மற்றும் முத்துராஜ் ஆகியோர் அச்சத்துடன் காணப்பட்டதாக தகவல் வெளியானது. சாதாரண கைதிகளை கண்டால் கூட ஏதாவது செய்து விடுவார்களோ? என்று அஞ்சிய அவர்கள், உள்ளூர் கைதிகள் உள்ள இந்த சிறையில் இருந்தால் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதால் மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீஸ் கைதிகள் 5 பேரும், தூத்துக்குடி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட 5 பேரும் தங்களுக்கு தேவையான வசதிகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன், பாதுகாப்பு குறைபாடு என்று தெரிவித்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

காரணம் தூத்துக்குடி சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏதாவது நடந்திருந்தால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என்று சுட்டிக்காட்ட இயலும், அப்படி எந்த மோதலும் இல்லாமல் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர் வழக்கறிஞர்கள்...

நீதிமன்ற விசாரணையின் போது இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடப்பதால், கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்கு ஆஜர்படுத்த வசதியாக, தூத்துக்குடி சிறையிலேயே அடைக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 5 போலீஸ் கைதிகளும் சிறையில் உள்ள மற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை போல நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments