சாத்தான்குளம் சிசிடிவி காட்சி பதிவுகளை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது - சிபிசிஐடி ஐஜி சங்கர்

0 3867

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளை  மீட்க முயற்சி செய்து வருவதாக சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஜி சங்கர், இரட்டைக் கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீசாரை, அடுத்த வாரத்தில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அழிந்து போன சிசிடிவி காட்சிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அதிக சாட்சிகள் வந்து கொண்டிருப்பதாகவும், இதுவரை 10 முதல் 15 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்களாக செயல்பட்ட 5 இளைஞர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பிரெண்ட்ஸ் ஆப் போலீசாருக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை எனவும் சிபிசிஐடி கூறியுள்ளது. சமூகஇணையங்களில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு எதிராக அடிப்படை முகாந்திரமில்லாத வகையில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இதேபோல் இணையதளம் ஒன்றில் ஜெயராஜ், பென்னிக்ஸ் 2 பேரின் உடம்பில் காயங்கள் இருப்பது போல வெளியான படங்கள் சித்திரிக்கப்பட்டவை என்றும், இதுதொடர்பாக புகார் பெறப்பட்டு சிபிசிஐடி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது என்றும் சிபிசிஐடி கூறியுள்ளது.

இவ்வாறான பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவோர் மீது சட்டத்துக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள சிபிசிஐடி, இத்தகைய பதிவுகளை, பொய்யான செய்திகளை தனிநபரோ அல்லது அமைப்புகளோ இணையதளத்தில் பகிர்ந்திருந்தால், அவற்றை தாங்களே நீக்கிவிட வேண்டும் என எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments