அந்தமானில் ராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்

0 6305

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் விரிவாக்க நடவடிக்கைகளுக்குப் போட்டியாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஐயாயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணுவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. 

572 தீவுக் கூட்டங்கள் அடங்கிய அந்தமான் நிக்கோபார் பன்னாட்டுக் கடல் வழிகளின் அருகில் உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து சீனாவுக்கு எண்ணெய்க் கப்பல்கள் அந்தமான் தீவுகள் வழியே தான் செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகளில் அந்தமான் நிக்கோபார் கமாண்ட் என்கிற படைப்பிரிவு 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்த ஒரே படைப்பிரிவு இதுவாகும். இந்தப் படைப்பிரிவை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தாலும் போதிய நிதி ஒதுக்கப்படாததாலும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும் அவை நிலுவையில் இருந்தன. லடாக்கில் சீனாவுடனான மோதலுக்குப் பின் அந்தமானில் ராணுவ உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.

பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் கோகாசா, பாஸ் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை விமானத் தளங்களின் ஓடுபாதையைப் பத்தாயிரம் அடி தொலைவுக்கு விரிவாக்கும் திட்டத்துக்கான நில ஒதுக்கீடும், அனுமதியும் இப்போது உடனடியாக வழங்கப்பட்டுள்ளன. ஐயாயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆண்டுகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

கமோர்த்தா தீவில் பத்தாயிரம் அடி நீள ஓடுபாதையுடன் கூடிய விமானத் தளத்தை அமைப்பதும் இதில் அடங்கும். அந்தமானில் படிப்படியாக படைவலிமையை அதிகரிக்கும் இந்தத் திட்டம் 2027ஆம் ஆண்டு முடிவடையும். இதனால் கூடுதலாகப் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை நிறுத்துவதுடன், கூடுதல் படையினரையும் அங்குத் தங்க வைக்க முடியும். இதனால் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் தனது மேலாண்மையை நிறுவ முயலும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா தடையாக விளங்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments