கொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை ; 98 நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு புறப்பட்ட ' ஹீரோ' டாக்டர்!

0 5666


கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள் , மருத்துவர்கள், நர்ஸ்கள் கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல மருத்துவர்கள், நர்ஸ்களும் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சுகுமார் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் கொரோனாவால் மரணம் அடைந்துவிட்டார். இப்படி, மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களை காக்க போராடி வருகின்றனர்.

கோவா மாநிலத்தில் கொரோனாவால் 1576 பேர் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 750 பேர் குணமடைந்துள்ளனர். கோவாவில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில்தான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு, சிகிச்சையளிக்கும் ஒரு பிரிவு மருத்துவக்குழுவுக்குத் தலைவராக இருந்தவர் டாக்டர். எட்வின் கோமஸ். இவர் தலைமையில் 333 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். அதில், 153 பேர் முற்றிலும் குணமடைந்தனர் . 86 பேர் நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில்,குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிகிச்சையளித்த 98 நாள்களும் டாக்டர். எட்வின் கோமஸ் தன் வீட்டுக்கு செல்லவில்லை என்பதுதான்.

மருத்துவமனையில் தங்கியே அவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். இந்த நிலையில், டாக்டர் எட்வின் கோமஸ் தலைமையிலான குழுவினருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து , 98 நாள்களுக்கு பிறகு டாக்டர் எட்வின் கோமஸ் நேற்று தன் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்த அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 3 வார கால ஓய்வு அல்லது தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு ,எட்வின் கோமஸ் மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்புவார். அதுவரை, தொலைபேசி வழியாக டாக்டர்களுக்கு தேவையான அறிவுரை வழங்குவார்.

இது குறித்து எட்வின் கோமஸ் கூறுகையில், '' ஓய்வு காலத்தில் குழந்தைகளுடன் விளையாடுவது, குழந்தைகளுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து சாப்பிட வைப்பது, நண்பர்களுடன் போனில் அரட்டையடிப்பது என்று பொழுதை கழிக்கப் போகிறேன். எங்களை பொறுத்த வரை, கோவா மருத்துவமனையில் ஒரு குடும்பம் போலவே மருத்துவக்குழுவினர் செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறோம். தற்போது, பணியில் இருக்கும் குழுவினருக்கும் எங்களின் ஆலோசனையை வழங்குவோம் '' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments