''மோடி வலிமையானவர் என்பதை காட்டுகிறார் '- லடாக் விஜயம் குறித்து 'குளோபல் டைம்ஸ்' செய்தி

0 14436

கடந்த ஜூன் 15- ந் தேதி இந்திய வீரர்கள் சீன வீரர்கள் லடாக் பகுதியில் மோதிக் கொண்டனர். இதில், 20 இந்திய வீரர்கள் பலியாகினர். 43 சீன வீரர்களும் பலியானதாக தகவல் உள்ளது. ஆனால், தங்கள் தரப்பு இழப்பை சீனா வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.

இதற்கிடையே, எல்லை பகுதியை காக்க போராடும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த பிரதமர் மோடி லே பகுதியில் உள்ள நிம்முவுக்கு விஜயம் செய்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசனர் அஜித் தோவாலின் ஆலோசனையின் பேரிலேயே பிரதமர் மோடி , லே பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியின் நிம்மு விஜயத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்தான் ராணுவத் தளபதிகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 14 நாள்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ள, அஜித் தோவால் டெல்லியிலிருந்தபடியே இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். நிம்முவில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், 'எல்லையை விரிவாக்கம் செய்யும் சகாப்தம் முடிந்து விட்டது' என்று சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி லடாக்குக்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்திய மக்களும் எதிர்பார்க்கவில்லை. சீன அரசும் கிஞ்சித்தும் யோசித்து பார்க்கவில்லை. மோடியின் லடாக் விஜயம் சீன அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் மோடியின் லடாக் விஜயம் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான 'குளோபல் டைம்ஸ் ' சிறிய செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி நிம்மு விஜயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரசுரிக்கவில்லை.

பெய்ஜிங்கில் உள்ள ஜிங்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் கியான் ஃபெங் குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில் , '' மோடி தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்காகவும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தான் ஒரு "வலிமையானவர்" என்பதைக் காட்டுவதற்காகவும் லே பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை போன்றவற்றை மறைக்கும் வகையில் மோடி  இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எல்லை விவகாரத்தை  சுமுகமாக பேசி தீர்க்க இந்திய அரசு தயராக இருந்தாலும் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதியுடன் நிற்கிறது என்பதை சீனாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காட்ட மோடியின் நிம்மு விசிட் உதவியது'' என்று சொல்லப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments