காதல் திருமணத்துக்கு வரதட்சனை கேட்டதால் இரட்டை கொலை..! 40 பவுன் நகைக்கு பதில் வெட்டு

0 23819
இரட்டைக் கொலையில் 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதலித்து திருமணம் செய்த 10 வது நாளில் 40 பவுன் நகைக்காக காதல் மனைவியை கொடுமைப்படுத்திய மாப்பிள்ளையின் பேராசையால், அவரது தாய் மற்றும் நண்பர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை தமன்னாவுடன் இருப்பது போல திருமண பேனர் வைத்தவர் சடலமான பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிவகளையைச் சேர்ந்த விக்னேஷ் ராஜா பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  சில ஆண்டுகளுக்கு முன் பொட்டல் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் அவ்வூரைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் மீது விக்னேஷ் ராஜாவுக்கு காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், விக்னேஷ் ராஜாவின் குடும்பம் பொருளாதாரத்தில் சற்று பின் தங்கிய குடும்பம் என்பதாலும் சங்கீதாவின் பெற்றோர் இருவருமே அரசு ஊழியர்கள் என்பதாலும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. அந்த எதிர்ப்பையும் மீறி 20 நாட்களுக்கு முன் விக்னேஷ் ராஜா - சங்கீதா ஜோடியின் திருமணம் நடந்துள்ளது.

மகள் ஆசைபட்டதால் வேறு வழியின்றி சங்கீதாவின் பெற்றோர் சமாதானத்துக்கு வந்திருந்தாலும் சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜாவுக்கு இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடியை சங்கீதாவின் பெற்றோர் ஏரலில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் தங்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில் புதுமாப்பிள்ளை விக்னேஷ் ராஜா சிவகளையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த போது அங்கு வந்த சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கராஜா அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

தடுக்க வந்த தாய் முத்துபேச்சி, காதலுக்கு தூதுபோன நண்பர் அருண் மகேஷ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த தாய் முத்து பேச்சி, நண்பர் அருண்மகேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். உயிர் தப்பிய மாப்பிள்ளை விக்னேஷ் ராஜாவும் அவரது தந்தை லட்சுமணனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். 24 மணி நேரத்திற்குள்ளாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக முத்துராமலிங்க ராஜா, அவரது உறவினர் முத்துச்சுடர், நண்பர் அருணாச்சலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கள் வீட்டு பெண்ணை மனதை கெடுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, தங்குவதற்கு தங்களுக்கு சொந்தமான வீட்டை கொடுத்த நிலையில் வரதட்சனையாக மேலும் 40 பவுன் நகையை கேட்டு அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீடுபுகுந்து வெட்டியதாக கொலையாளிகள் தெரிவித்ததாக எஸ்.பி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலியான அருண் மகேஷ், நடிகை தமன்னாவின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகின்றது. திருமண பேனரில் அவர் அருகில் தமன்னா இருப்பது போன்று புகைபடத்தை அச்சிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

காதலித்த பெண்ணை கரம்பிடித்து கடைசி வரை தன் உழைப்பில் காப்பாற்றுவதே உண்மையான காதல்... திருமணம் முடிந்த மறுநாளே பெண் வீட்டில் எவ்வளவு தேறும் என்று கணக்கு பார்ப்பது நாடக காதல் என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், பெண்கள் தங்கள் பெற்றோர் சொல் கேளாமல், ஏமாற்றுக்காரனை நம்பி நாடக காதலில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments