உ.பி.யில் ரவுடிகள் துப்பாக்கிச் சூடு.. தாதாவை பிடிக்க சென்ற 8 போலீசார் பலி..!

0 43178

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் நிழல் உலக தாதா விகாஸ் துபேயை (nab gangster Vikas Dubey) பிடிக்க சென்ற இடத்தில், ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் 8 போலீசார் பலியாகினர். 

கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவனான தாதா விகாஸ் துபே மீது கொலை, கொள்ளைகள் தொடர்பாக 60 வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளன.

பாஜகவை சேர்ந்த அமைச்சர் நிலையிலான மூத்த தலைவர் சந்தோஸ் சுக்லா மற்றும் 2 போலீசார், 2001ம் ஆண்டு காவல்நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிறகு விடுவிக்கப்பட்டான். இதேபோல் 2000ம் ஆண்டில் கல்லூரி முதல்வர் கொலை சம்பவத்திலும் அவனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தான்.

இந்நிலையில் விகாஸ் துபே மீது ராகுல் திவாரி என்ற கிராமவாசி அண்மையில் கொலை முயற்சி புகார் அளித்தார். இதன்பேரில் அவனை பிடிக்க பிக்ரு கிராமத்துக்கு போலீசார் நேற்றிரவு சென்றனர். இதேபோல் கான்பூரில் கடந்த மாதம் 18ம் தேதி பகுஜன் சமாஜ் பிரமுகர் பின்டு சென்கரை சுட்டுக் கொன்ற கூலிப்படை நபர்களை பிடிக்கவும் சென்றனர்.

அப்போது போலீசாரை தடுத்து நிறுத்த சாலையின் குறுக்கே பொக்லைன் வண்டிகளை (Earth movers) விகாஸ் துபேயின் கையாள்களான ரவுடிகள் நிறுத்தியிருந்தனர். அதை அகற்ற போலீசார் சென்றபோது, கட்டிட மாடிகளில் பதுங்கியிருந்து போலீசார் மீது அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர மிஸ்ரா, உதவி ஆய்வாளர்கள் மகேஸ் யாதவ், அனுப் குமார், பாபுலால் உள்ளிட்ட 8 போலீசார் பலியாகினர். மேலும் 5 போலீசார் காயமடைந்தனர்.

நிவாடா கிராமத்தில் விகாஸ் துபேயின் கையாள்கள் 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதேபோல் விகாஸ் துபேயின் உறவினர் தினேஸ் திவாரியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து கான்பூர் செல்லும் 6 மாவட்ட எல்லைகள் சீலிடப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை உயரதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அருண் உட்பட அவனது நண்பர்களான பிரேம்நாத், சிலம்பரசன், செல்வன் ஆகிய 4 பேரையும் வில்லியனூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்கள் 7 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர், சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments