அறந்தாங்கி 7வயது சிறுமி கொலை-ஒருவன் கைது

0 11613

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக  இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கி அருகேவுள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பை சேர்ந்த நாகூரானின் மகளான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் காணாமல் போனநிலையில், பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக தேடியபோது, அங்குள்ள கண்மாயில் நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். அவளது உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததையடுத்து, கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், கொலை செய்தது யார், எப்படி கொலை செய்யப்பட்டாள் என்பது தெரியாததால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த 3 பேரில் ஒருவனான மாரிமுத்துவின் மகன் ராஜாவை கைது செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும், 50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றினால்தான் சிறுமியின் சடலத்தை வாங்குவோம் என கூறி, பெற்றோர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் எம்எல்ஏ ரத்தின சபாபதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த ஆணைய உறுப்பினரான டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments