’பத்து ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது...’ - தென்காசி மக்களுக்கு கிடைத்த வரம் ராமசாமி டாக்டர் #NationalDoctorsDay

0 17620
பத்து ரூபாய் டாக்டர்

தென்காசி, வாய்க்கால் பாலம் அருகே இருக்கிறது ராமசாமி கிளினிக். எப்போது பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழியும். ராமசாமி கிளினிக்குக்கு வருபவர்கள் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகளாகவே இருப்பார்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைவரிடமும் கனிவுடனும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் பேசி, நலம் விசாரித்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் ராமசாமி.

தென்காசி பேருந்து நிலையத்தில் இறங்கி, 'பத்து ரூபாய்' டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் போதும். உடனே, அடுத்த தெருவில் இருக்கும் மருத்துவரின் இல்லத்துக்குக் கையேடு அழைத்துச் சென்று விட்டுவிடுவார்கள் பொதுமக்கள். அந்த அளவுக்கு மருத்துவர் மீது தென்காசி மக்கள் மதிப்பைபும், மரியாதையையும் வைத்துள்ளனர். 

தென்காசியை சேர்ந்த தாரிக் "மருத்துவர் ஐயா முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக இங்கு ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார். முதன் முதலில் அவர் தென்காசியில் கிளினிக் ஆரம்பித்த போது இரண்டு ரூபாய் தான் வாங்கினார். அதன் பிறகு ஐந்து ரூபாய் வாங்கினார். கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களால் அதைக் கூட கொடுக்க முடியாது. பணம் இல்லானழம் இலவசமாகவே சிகிச்சை அளித்து அனுப்புவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஐயா பத்து ரூபாய் வாங்கத் தொடங்கினார். அதுவும் மெயின்டனன்ஸ் மற்றும் உதவியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கத்தான்.  தென்காசி மக்களுக்குக் கிடைத்த வரம் தான் ராமசாமி டாக்டர் ஐயா என்றாலே தென்காசி மக்களுக்கு அவ்வளவு பிரியம்.  எப்போது கஷ்டம் என்று போனாலும் ஐயா மறுபேச்சு பேசாமல் சிகிச்சை கொடுத்து அனுப்பி வைப்பாங்க. ஐயா கிளினிக் முடித்து வீட்டுக்குச் சென்றாலும் அங்கும் ஒரு பத்து பேர் அவருக்காகக் காத்திருப்பார்கள்" என்று மெய்சிலிர்க்கிறார். 

image
மருத்துவர் ராமசாமி

இன்று தேசிய  மருத்துவர் தினமாகையால் மருத்துவர் ராமசாமியை தொடர்பு கொண்டு  வாழ்த்து தெரிவித்தோம். தனது அனுபவங்களை நம்முடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.   "கடந்த 1972 - ல்  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில்  எம்.பி.பி.எஸ்  முடித்தேன். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் சில வருடங்கள் பணியாற்றினேன். தென்காசி வந்து 38 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு விருப்ப ஒய்வு பெற்றுவிட்டு இங்குதான் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இலவசமாகக்  கொடுத்தால் எதற்குமே மதிப்பு இருக்காது. அதனால், நான் இப்போது 10 ரூபாய் வசூலிக்கிறேன். உடன் வேலை பார்ப்பவர்களும் சரி, மெடிக்கல் நிறுவனங்களும் சரி எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் என்னால் இந்த சேவையை செய்ய முடிகிறது. நான் கன்சல்டிங் சார்ஜ் ஆக வசூல் செய்யும் பத்து ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. குடும்பத்திலும் நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள்.  மனநிறைவுடன் இதை நான் செய்கிறேன்" என்று இயல்பாக சொன்னார் 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments