'சேப்பாக்கமும் சென்னையும் நிச்சயம் கைகொடுக்கும்!' - தமிழகத்தின் மீது ஸ்ரீசாந்த் நம்பிக்கை

0 4266

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் முதல் தர கிரிகெட் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமென்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2013- ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் போது, மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதத்துடன் தடை முடிவடைகிறது. இதையடுத்து, மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப ஸ்ரீசாந்த் தயராகி வருகிறார். பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி இரு இடங்களில் லீக் தொடர்களில் விளையாட தனக்கு அனுமதி அளித்துள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ரஞ்சி டிராபியில் கேரள அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் முதல் தர லீக் தொடரில் குளோபல் ட்ரோட்டர்ஸ் அணிக்காக ஏற்கெனவே ஸ்ரீசாந்த் விளையாடியுள்ளார். எனவே, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் இந்த தொடரில் ஸ்ரீசாந்த் பங்கேற்க வாய்ப்புள்ளது. சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் பவுண்டேசனில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சு பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 37 வயதான ஸ்ரீசாந்த் கூறுகையில், ''சென்னையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. டென்னிஸ் லில்லி, டி.ஏ. சேகர் ஆகியோரிடத்தில் பந்துவீச்சு பயிற்சி பெற்றவன் நான். எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாடிய காலத்தை மறக்கவே முடியாது. இந்த மைதானத்தின் ஆடுகளம் சிறப்பானது. குவாலிட்டியான பேட்ஸ்மேன்களும் பந்து வீச்சாளர்களுக்கு சவாலை கொடுப்பார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் லீக்கில் ஆடுவது எப்போதுமே எனக்கு மனநிறைவான விஷயம். குளோபல் ட்ரோட்டர்ஸ் மட்டுமல்லாமல் இந்த லீக்கில் எந்த அணிக்காகவும் விளையாட நான் தயாராக உள்ளேன். எனது பழைய பந்துவீச்சை நிரூபித்து காட்ட எனக்கு சேப்பாக்கமும் சென்னையும் கைகொடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments