கொரோனாவின் கொடூரம்.. பெற்றோர் உயிரிழப்பு..! மகனுக்கு தீவிர சிகிச்சை

0 17507

சென்னையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வந்த சமூக ஆர்வலரான மாற்றுத்திறனாளியும், அவரது மனைவியும் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மன வளர்ச்சி குன்றிய அவர்களின் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே.வி.பி கார்டனில் வசித்து வந்தவர்கள் ஏ. கே. அருணாச்சலம் மற்றும் கீதா தம்பதியினர். 26 வயதாகும் இவர்களது ஒரே மகனான மணி மன வளர்ச்சி குன்றியவர். 

62 வயதான சமூக ஆர்வலரான அருணாச்சலம் 50 சதவீத கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராகவும் இருந்து வந்தார்.

ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் கண் பார்வையற்றவர்களுக்கு உதவும் நோக்கில், தனது வயதையும், நோய் தொற்று அச்சத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி வந்தார் அருணாச்சலம். இதனால் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதுடன், அவரின் மனைவி கீதா மற்றும் மகன் மணிக்கும் தொற்று பரவியது. இதையடுத்து, அவர்கள் மூவரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மன வளர்ச்சி குன்றிய இவர்களின் மகன் மணிக்கு இந்த தகவல் தெரியாத சூழ்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடல் அளவில் தானாக இயங்க முடியாத மணியை இத்தனை ஆண்டுகளாய் அவரது பெற்றோர்கள் இருவரும் கவனித்து வந்தனர். சுயநலம் கருதாமல் பொதுச்சேவையில் ஈடுபட்ட பெற்றோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் மகனோ தற்போது ஆதரவற்று நிர்க்கதியாக உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments