எளிதாக டீல் செய்யும் இந்தியா... புழுக்கத்தில் சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்ட பின்னணி

0 14704

ந்திய நாட்டின் இறையாண்மை,  பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன அரசு லடாக் எல்லையில் அத்துமீறி நடந்துகொண்டதற்கு எதிரான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் மட்டும் சுமார் 2 கோடி பயனர்களைக் கொண்ட டிக்டாக்; வீடியோ எடிட் செயலிகளான லிக்கீ, விகோ வீடியோ; ஈ - காமர்ஸ் தளத்தில் இயங்கும் கிளப் பேக்டரி, ஷெய்ன்; வீ சாட், கேம் ஸ்கேனர், ஷேர் இட்; அலிபாபா குழுமத்தின் யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சசம், "பல்வேறு தரப்பிலிருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. பயனாளர்களின் தகவல்களை சட்டத்துக்குப் புறம்பாக இந்தியாவுக்கு வெளியே கடத்திய குற்றத்துக்காகவும் திருடிய குற்றத்துக்காகவும் இந்த செயலிகள் தடை செய்யப்படுகின்றன'' என்று விளக்கம் அளித்தது.

ஏற்கெனவே, இந்திய உளவுத்துறை "53 செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி இந்தியாவுக்கு வெளியே கடத்துகிறது" என்று குற்றம்சாட்டியிருந்தது. 

தரவுகளைத் திருடுவது தொடர்பாக ஐரோப்பிய யூனியனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது, டிக்டாக் நிறுவனம். பெய்ஜிங்கை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தது டிக்டாக். 

சமீபத்தில் டெலிகிராப் பத்திரிக்கை , 'டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் ஐஓஎஸ்14 - ல் கிளிப்போர்ட் தரவுகளை அணுக முயற்சித்த போது சிக்கியிருக்கின்றன. எத்தனை செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கிளிப்போர்டை கண்காணிக்கின்றன என்று ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு இணைப்பு மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இது அம்பலமானது" என்று கூறியிருந்தது. இந்த பிரச்னைக்கு, “தற்போது ஆண்டி - ஸ்பேம் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட செயலியை ஆப்பிள் ஸ்டோரில் பதிவேற்றி விட்டோம்" என்று பதில் அளித்தது  டிக்டாக்.  
 
பல தரப்பிலும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது டிக்டாக் செயலி உட்பட பல செயலிகள் நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுவிட்டன. கூகுள், ஆப்பிள் பிளே ஸ்டோரிலும் இந்த செயலிகள் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்படும் செயலிகள் ஊக்குவிக்கப்படும். ஏற்கெனவே சிங்காரி எனும் செயலி டிக்டாக்குக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த செயலி 2.5 மில்லியனுக்கும் மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஷார்ட் வீடியோ ஆப் பத்து நாள்களில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு சீன செயலிகளுக்கும் மாற்றாக மற்ற செயலிகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் பயனர்கள்.

சிங்காரி செயலியின் இணை நிறுவனர் பிஸ்வாத்மா, "கடந்த சில நாள்களில் மட்டும் 400 % பேர் அதிகளவில் எங்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் இனி பரவலாக இந்திய நிறுவனங்களின் செயலிகள் அதிகளவில் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த சூழலை இந்திய நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments