திருச்சியில் 80 'கரடுமுரடு' போலீஸ் கண்டுபிடிப்பு! அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்த டி.ஐ.ஜி உத்தரவு

0 14612

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் கஸ்டடியில் இறந்தனர். இந்த லாக்டௌன் காலத்தில் தமிழகம் முழுவதுமே பல இடங்களில் போலீஸாரால் மக்கள் தாக்கப்படுவது அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழக முதல்வர் பழனிச்சாமி, சென்னை கமிஷனர் ஏ. கே.விஸ்வநாதன் ஆகியோர் 'மக்களைக் கனிவுடன் நடத்துங்கள் ' என்று கேட்டுக் கொண்ட பிறகும், போலீஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் சம்பவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால், மக்களிடத்தில் கரடு முரடாக நடக்கும் போலீஸார் மீது மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். அதில், ஒரு பகுதியாக திருச்சி சரகத்தில் மக்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட 80 போலீஸ்காரர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள 80 பேருக்கும் தற்போது எந்த பணியும் வழங்கப்படாது. இவர்கள் அனைவரும் அறிவாற்றல் நடத்தை ஆய்வுக்குட்படுத்தப்படுவார்கள் (Cognitive behavioural therapy). திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜ பாலகிருஷ்ணன் கூறுகையில், ' பட்டியலிலுள்ள 80 பேரும் இதற்கு முன் மக்களிடத்தில் நடந்து கொண்ட விதம், பின்னணி குறித்து ஸ்பெஷல் பிராஞ்ச் மற்றும் களப்பணியாளர்களிடத்திலிருந்து தகவல் திரட்டப்பட்டது. திருச்சி சரகத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், கான்ஸ்டபிள்கள் மட்டுமல்லாமல் சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பிக்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்குட்படுத்தப்படுவார்கள். ஒரு முறை இந்த சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் படிப்படியாக ரெகுலர் பணியில் அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments