’ஒரு கிலோ ரூ.20,000; வட சென்னையின் சொத்து!' பாலிகீட்ஸ் என்ற 'காஸ்ட்லி ' புழுக்கள் கடத்தலுக்கு பின்னணி என்ன?

0 36721

சென்னை, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கிடைக்கும் பாலிகீட்ஸ் புழுக்கள் சட்ட விரோதமாக, அதிகளவில் கடத்தப்படுவதால், கடல் வளமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  உடனே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த கடத்தலைத் தடுத்து நிறுத்தி கடல் வளத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையை ஒட்டியிருக்கும் எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் கடலுடன் சங்கமிக்கிறது கொசஸ்தலை ஆறு. இதன் முகத்துவாரப் பகுதியில் காணப்படும் சேற்றில்  பாலிகீட்ஸ் புழுக்கள்  அதிகளவு உள்ளன, பாலிகீட்ஸ் புழுக்கள். கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால்,   இந்தப் புழுக்களுக்கு ’காஸ்ட்லி புழு’ என்ற பெயரும் உண்டு. இந்தப் புழுக்கள்தான் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு முக்கிய உணவ ஆகும்.  மேலும், அந்தப் பகுதியில் உள்ள மண் வளத்தையும் பாதுகாக்கிறது. இந்தப் புழுவைத் தூண்டிலில் போட்டால் அரிய மீன்களையும் எளிதில் மேலே வரவழைத்துப் பிடித்துவிடலாம் என்கிறார்கள் மீனவர்கள்.

இந்த பாலிகீட்ஸ் புழுக்கள் கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால், இதைச் சேகரித்துக் கடத்துவதற்கென்றே வட சென்னை பகுதியில் பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் முகத்துவாரப் பகுதிகளில் பலர் புழுக்களைப் பிடிக்க சேற்றுக்குள் சுற்றுவதை  பார்க்க முடியும். இந்த புழுக்களை அளவுக்கு அதிகமாகக் கடத்தப்படுவதால் அந்தப் பகுதியில் கடல் வளமே அழியும் நிலை உருவாகியுள்ளது. 

பாலிகீட்ஸ் புழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அதன் கள்ளச் சந்தை மதிப்பைப் பற்றியும் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் கோசு மணி பேசினோம்''  

“மீன்களின் முக்கிய உணவு ஆதாரம் இந்த  பாலிகீட்ஸ் புழுக்கள். தொடர்ந்து பாலிகீட்ஸ் புழுக்கள் பிடிக்கப்படுவதால் இந்தப் பகுதியில் மீன் வளமே குறைந்துவிட்டது. இந்தப் புழுக்கள் மருத்துவத்துக்குப் பயன்படுவதால்  கள்ளச்சந்தையில் அதிக அளவுக்கு விலை போகின்றன. இதைக் கடத்துவதற்கென்றே தனி மாஃபியா கும்பல் செயல்படுகிறது. ஒரு கிலோ பாலிகீட்ஸ் புழுக்கள் சர்வ சாதாரணமாக ரூ. 20,000 அளவுக்கு விலை போகின்றன. எண்ணூர் பகுதிகளில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியில் பல ஆண்டுகளாகவே இந்த வகைப் புழுக்கள் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலைத் தடுக்க பல ஆண்டுகளாகவே போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தக் கடத்தலைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments