நரசிம்மராவின் சடலத்தை வைத்து நடந்த அரசியல்... அவமானங்கள் அவருக்கு புதியதும் அல்ல!

0 16224

நவீன இந்தியாவின் சிற்பி யாரென்று கேட்டால் நிச்சயம் நரசிம்ம ராவை நோக்கி கை காட்டலாம். .அயல் நாடுகளிடம் இருந்து வாங்கிய கடனுக்கு, வட்டி கூட கட்ட முடியாத கஷ்டத்தில் அப்போது நாடு இருந்தது. கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை விற்று, வட்டியையும், தவணையையும் செலுத்தலாம் என்கிற துணிச்சலான முடிவை எடுத்தவர். தாராளமயமாக்கலுக்கு அடித்தளம் அமைத்த சிற்பி. மைனாரிட்டி அரசை 5 ஆண்டுகள் கரை சேர்த்தவர். இவரின், சிஷ்ய பிள்ளைதான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தியாவில் ஆக்ஸிடென்டலாக பிரதமரான முதல் அரசியல்வாதி நரசிம்மராவ் என்பார்கள். 1991- ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, இவர் 'திடீர் ' பிரதமரானார். கட்சிக்கு சோனியா காந்தி தலைவராக இருந்தாலும், நரசிம்மராவ் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவரும் மன்மோகனை போல அதிகம் பேசமாட்டார். வாய் விட்டு சிரிப்பதை கூட பார்ப்பதும் அரிது. ஆனால், நேர்த்தியான அரசியல்வாதி என்பார்கள். ஆனால், நரசிம்மராவ் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமை நரசிம்மராவ் மீது ஒரு வித வெறுப்பை காட்டியது என்று சொல்வார்கள். நரசிம்மராவின் மரணமடைந்த தினத்தில் கூட அந்த வெறுப்பு வெளிப்பட்டது.

image

பொதுவாக, பிரதமர் பதவியில் இருந்தவர்கள் உயிரிழந்தால், டெல்லியில்தான் பெரும்பாலும் புதைக்கப்படுவார்கள். ஏனென்றால், நினைவுஇல்லம் எழுப்பவும் வாய்ப்பு உண்டு. ஆனால், நரசிம்மராவின் உடல் டெல்லியிலிருந்து 1,500 கி.மீ தொலைவிலுள்ள ஹைதரபாத்துக்கு கொண்டு வந்துதான் புதைக்கப்பட்டது. இதற்கு,பின்னணியில் காங்கிரஸ் கட்சி தலைமை இருந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த 2004- ம் ஆண்டு டிசம்பர் 23- ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருந்துவமனையில் நரசிம்மராவ் இறந்தார். டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கேதான், நரசிம்மராவின் உடலை வைத்து அரசியல் செய்த விஷயங்கள் அரங்கேறின. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த ஷிவ்ராஜ் பாட்டில், நரசிம்மராவின் இளையமகன் பிரபாகராவிடத்தில், 'உங்கள் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை ஹைதரபாத்தில் வைத்துக் கொள்ளலாம்தானே ' என்று விஷயத்தை உடைத்தார்.

அதிர்ந்து போன பிரபாகரா, 'எங்கள் தந்தை கடைசி காலம் வரை இருந்தது டெல்லியில்தான். அதனால், அவரின் உடலை இங்கேதான் அடக்கம் செய்ய வேண்டும்' என்று பதிலளித்தார். ஷிவ்ராஜ் பாட்டீலின் முயற்சி தோல்வியுற, சோனியாவுக்கு நெருக்கமான குலாம்நபி ஆசாத்தும் இதே வேண்டுகோளை நரசிம்மராவின் குடும்பத்திடம் வைத்தார். ஆனால், அவர்களோ நரசிம்மராவின் உடலை ஹைதரபாத் கொண்டு செல்ல உறுதியாக மறுப்பு தெரிவித்தனர்.

நரசிம்மராவ் வாழ்க்கை வரலாறு புத்தகமான 'The half lion' என்ற புத்தகத்தை எழுதிய வினய் சீதாபதி அந்த புத்தகத்தில் ''நரசிம்மராவ் இறந்த தினத்தில்  மாலை நேரத்தில் சோனியா காந்தி வந்தார். உடன் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியும் இருந்தனர். மூவரும் நரசிம்ம ராவ் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பிறகு, பிரபாகராவிடத்தில் வந்த மன்மோகன் அதிசயமாக அன்று வாய் திறந்தார். 'என்ன பிரபாகரா, இவங்கலாம் உங்க அப்பாவோட இறுதிச்சடங்கு ஹைதரபாத்லதான் நடக்கனும்னு சொல்றாங்க நீ என்ன சொல்றே ' என்று கேட்டார்.

இந்த சமயத்தில் மன்மோகன் , காதருகே சோனியா ஏதோ குசு குசுவென்று பேசினார். ஆனால், தன் தந்தையின் உடலை டெல்லியில் அடக்கம் செய்வதில் உறுதியாக இருந்தார் பிரபாகரா. பிறகு, 'டெல்லியில் உங்கள் தந்தைக்கு டெல்லியில் நினைவில்லம் எழுப்புகிறோம் ' என்று கூறி நரசிம்மராவின் உடலை ஹைதரபாத் எடுத்து செல்ல அவரின் குடும்பத்தினரை சம்மதிக்க வைத்தனர்'' என்று  குறிப்பிட்டுள்ளார்.
image

பொதுவாக கட்சித் தலைவர்கள் இறந்தால், அவர்களின் உடல் கட்சித் தலைமையகத்துக்கு  கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும், ஆனால், நரசிம்மராவின் உடலுக்கு இந்த மரியாதை கூட கிடைக்கவில்லை. ஹைதராபாத் எடுத்து செல்லும் முன், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி நரசிம்மராவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், 24 - அக்பர் அலி ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் அருகே சோனியா காந்தி வீட்டருகே நரசிம்மராவின் உடல் சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அங்கே திரண்டிருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் வாசல் மட்டும் திறக்கப்படவில்லை. அலுவலகத்துக்குள் நரசிம்ம ராவின் உடல் எடுத்து செல்லப்படவே இல்லை. சுமார் 30 நிமிடம் வாசலில் வைத்தே தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர், தேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு இப்படி ஒரு அவமரியாதை ஏற்படுமென்று நரசிம்மராவின் குடும்பத்தினர் கிஞ்சித்தும் நினைத்து பார்க்கவில்லை. 

இத்தனைக்கும் அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது.  நரசிம்மராவுக்கு நினைவில்லம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் ஆட்சியிலிருந்த 10 ஆண்டு காலத்திலும் காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது. சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, டெல்லியில் 2015-ம் ஆண்டுதான் நரசிம்மராவுக்கு நினைவில்லம் அமைக்கப்பட்டது. இதையும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அமைத்தது. 

தெலங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் லக்னபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மராவ் 1921-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறந்தார். இன்று முதல் அவரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தெலங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments