ஃ பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தப்பிக்க முயன்ற சதீஷ் முத்து! நண்பர்களால் உண்மை அம்பலம்

0 35559

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் கஷ்டடியில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கண்டனம் எழுந்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் சதீஷ் முத்து என்ற போலீஸ்காரரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து அருவெருக்கத்தக்க வகையில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பதிவு சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவியது. 'போலீஸ்காரர் ஒருவரே அரசுப்பணியில் இருந்து கொண்டு இப்படி பதிவிடுவது சரியா?' என்று பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. இந்தநிலையில், காவல்துறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்துவை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக தன் பதிவால் பிரச்னை உருவானதையடுத்து, தப்பிக்க சதீஷ் முத்து பல முயற்சிகளை மேற்கொண்டார். தன் ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து சதீஷ் முத்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், '' மேற்கண்ட பதிவு உங்களது மனதை புண்படுத்தியது என்ற மனவருத்தத்துடன் பதிவிடுகிறேன். இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாத்தான்குளத்தில் நடந்த நிகழ்வை வைத்து, காவல்துறைக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக ,என்னுடைய ஃபேஸ்புக் ஐடியை உபயோகித்து யாரோ வேண்டுமென்றே, மேற்கண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்கள. ஆகையால் அனைவரும் என்னை தங்கள் சகோதரனாக நினைத்து மன்னிக்க வேண்டுகிறேன்'' என்று சொல்லப்பட்டிருந்தது. 

மற்றோரு பதிவில், ''எனது ஃபேஸ்புக் கணக்கு அநாமதேய பயனரால் ஹேக் செய்யப்பட்டது.  நான் அந்த இடுகையிடவில்லை. தயவுசெய்து சட்ட விரோதமான சமூக விரோத இடுகையைப் பகிர வேண்டாம். நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இந்த மாதத்தில் இரண்டாவது முறை எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சைபர் கிரைம் போலீசார் உறுதியளித்துள்ளனர்'' என்று கூறியிருந்தார்.

ஆனால், போலீஸ் விசாரணையில் சதீஷ்முத்து வசமாக சிக்கிக் கொண்டார். சதீஷ் முத்துவே, தன் நண்பர்களிடத்தில் ஃபேஸ்புக் பக்கத்தின் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சதீஷ் முத்து அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments