'ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் ' - சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக பி.டி.ஐ நிறுவனத்துக்கு பிரசார் பாரதி எச்சரிக்கை

0 10007

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செய்தி வெளியிட்டு வருவதாக பி.டி.ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக  பிரசார்பாரதி எச்சரித்துள்ளது.

சமீபத்தில் பி.டி.ஐ இணையதளத்தில் சீனாவுக்கான இந்திய தூதர் சன் வெய்டோங் பேட்டி வெளியிடப்பட்டது. லடாக் விவகாரத்தில் இந்தியாவை குற்றம் சாட்டி அவர் பேட்டியளித்திருந்தார். இந்தியாவே எல்.ஓ.சி விவகாரத்துக்கும் பிரச்னைக்கும் காரணம் என்றும் சன் வெய்டோங் குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேட்டியை வெளியிட்டதால் பி.டி.ஐ செய்தி நிறுவனம் பிரசர் பாரதியின் கோபத்துக்குள்ளாகியுள்ளது.

பி.டி.ஐ வெளியிடும் செய்திகள் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாக பிரசார்பாரதி குற்றம் சாட்டியுள்ளது.

பிரசார்பாரதியின் தலைவர் சமீர் குமார் பி.டி.ஐ நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், '' நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பி.டி.ஐ நிறுவனம் செய்திகள் வெளியிடவில்லை. பி.டி.ஐ . வெளியிடும் செய்திகள் மற்றும் தலையங்க குறைபாடுகள் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகள் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும். பி.டி.ஐ நிறுவனத்தின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டியதுள்ளது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் '' என்று சொல்லப்பட்டுள்ளது.

 பி.டி.ஐ நிறுவனம் தரப்பில் கூறுகையில், '' பிரசார்பாரதியிடத்தில் இருந்து எங்களுக்கு கடிதம் வந்தது உண்மைதான். அதற்கு தகுத்த ஆதாரங்களுடன் நாங்கள் பதிலளிப்போம்'' என்று தெரிவித்துள்ளது.

பிரசார்பாரதி தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். ஆண்டுக்கு ரூ. 9.15 கோடிக்கு பி.டி.ஐ நிறுவனத்துக்கு சேவைக் கட்டணமாக பிரசார்பாரதி செலுத்தி வருகிறது.

கடந்த 1947 - ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட பி.டி.ஐ நிறுவனம் 1949 - ம் ஆண்டு செயல்பாட்டை தொடங்கியது. 2019 -ம் ஆண்டு நிலவரப்படி 99 மீடியா நிறுவனங்கள் அதன் 5,416 பங்குகளையும் வைத்திருக்கின்றன. பஞ்சாப் கேசரி பத்திரிகையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எடிட்டரான விஜய் குமார் சோப்ரா தற்போது பி.டி. ஐ. தலைவராக உள்ளார். நாட்டின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பி.டி.ஐ பத்திரிகை சந்தாக்கள் மூலம் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments