3 லட்சம் கிலோ பருத்தியுடன் சாலையில் தவித்த விவசாயிகள்..!

0 3352

மயிலாடுதுறை அருகே கொரோனா அச்சம் காரணமாக ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகள் வர மறுத்த நிலையில் 3 லட்சம் கிலோ பருத்தியுடன் விவசாயிகள் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அடுத்த திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம்.

இதற்காக இரு தினங்களுக்கு முன்பாகவே பருத்தியை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் சீர்காழியில் நடந்த பருத்தி ஏலத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்க வந்திருந்த வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பருத்தி ஏலத்தில் பங்கேற்பதில்லை என்று வியாபாரிகள் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் பருத்தி ஏலம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த தகவல் விவசாயிகளை முழுமையாக சென்று அடையாத நிலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பருத்தி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வந்துவிட்டனர்.

ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படாததால் சுமார் 3 லட்சம் கிலோ பருத்தியுடன் சாலையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்துவிட சம்மதம் தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளை பாதுகாப்பாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துள்ளனர்.

மேலும் வியாபாரிகளிடம் பேசி சமூக இடைவெளியுடன் விவசாயிகளை நிற்க வைத்து திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பருத்தி ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் விவசாயிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் போது அந்ததகவல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments