'நானோ என் குழந்தையோ கிஞ்சித்தும் கவலைப்படப் போவதில்லை!' மகனின் நிறம் குறித்து விமர்சித்தவர்களுக்கு ஆய்ஷா தவான் பதிலடி

0 17572

உலகம் முழுவதும் இனவாதம் மற்றும் நிறவெறிக்கு எதிரான குரல்கள் எழுந்துவருகின்றன. வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள்  டேர்ரன் சமி மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோரும் நிறவெறி குறித்த கேலிக்குள்ளான சம்பவங்களை சமீபத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டனர். தற்போது ஷிகர் தவானின் மனைவியும் அவரது மகன் சோரவரைக் ’கருப்பாக’ இருக்கிறான் என்று சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் கேலி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். 

ஷிகர் தவானின் மனைவி ஆய்ஷா தவான், “என் மகன் பல சந்தர்ப்பங்களில் இனவெறி தொடர்பான கேலிக்கு ஆளாகியிருக்கிறான். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சோரவரின் படங்களுக்கு அறுவெறுக்கத்தக்க, சகித்துக்கொள்ள முடியாதபடி கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள்” என்று கூறியுள்ளார். 

இன்ஸ்டாகிராமில்  வந்த கமெண்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுத்துப் பதிவிட்டுள்ளார். அந்தக் கமெண்டுகளில் பலர் ஷிகர் - ஆயிஷாவின் மகன் சோரவரை கருப்பாக இருக்கிறான் என்று கிண்டல் அடித்துள்ளனர். அந்தக் கமெண்ட்டில் ஒருவர், “சோரவர் பாய் நீ கருப்பா இருக்கற... இனியும் அப்படித்தான் இருப்ப” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷிகர் தவானுக்கும் ஆயிஷாவுக்கும் 2012 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2014 - ல் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சோரவர் (Zoravar ) என்று பெயர் சூட்டினார். தற்போது கொரோனா லாக்டவுன் நீடிப்பதால் இருவரும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இருவரும் வழக்கமான நிகழ்வுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள், குழந்தையுடன் படங்களை பதிவிடும் போது,  பலர் கமெட்டுகளில் குழந்தை கருப்பாக இருப்பதாகக் கிண்டல் செய்கின்றனர்.

நிறைவெறியுடன் பகிரப்படும் கமெண்டுகளைப் பார்த்த தவானின் மனைவி ஆய்ஷா, “இந்தியர்கள், தோல் நிறத்தின் மீது  இந்த அளவுக்குக் கவனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கருப்பு, பிரௌன், வெள்ளை, மஞ்சள் என்று எப்படி இருந்தால் என்ன? உலகளவில் அதிக மக்கள் கருப்பு மற்றும் பிரௌன் நிறத்தில் தான் இருக்கிறார்கள். கருப்பாக இருப்பதை சிலர் பிரச்னையாகக் கருதுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது உங்கள் சுயத்தையே நீங்கள் வெறுப்பதைப் போல இருக்கிறது. யதார்த்தத்தை எந்த அளவுக்கு வெறுக்கிறீர்களோ அந்த அளவுக்கு பிரச்னைதான் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் இதைப் பெரிதுபடுத்தி பேசுவதால் நானும் கவலைப்படப் போவதில்லை. என் குழந்தைகளும் கவலைப்படப் போவதில்லை” என்று பதில் அளித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments