‘காஷ்மீர் மக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; NRC, CAA - அதிருப்தி தருகிறது’ - சர்ச்சையை ஏற்படுத்திய ஜோ பிடன் தேர்தல் அறிக்கை!

0 13295

மெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோட பிடன், “காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இந்தியா மேற்கொண்ட குடியுரிமைச் சட்டத்திருத்தம் மற்றும் அஸ்ஸாமில் மேற்கொண்ட தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகள் தமக்கு அதிருப்தி அளிக்கின்றன” என்று தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாததில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜோ பிடன் அமெரிக்காவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தனது கொள்கைகள் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அமெரிக்க முஸ்லீம் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் வகையில், தமது கொள்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டார் ஜோ பிடன். அந்த அறிக்கையில் '' சீனாவில் உய்கர் முஸ்லிம்கள், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆகியோருடன் இந்தியாவின் காஷ்மீர் முஸ்லிம்களையும் இணைத்து தம் கருத்து வெளியிட்டூள்ளார் 

 “காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைதியாகப் போராடுவோருக்குத் தடை விதிப்பது, இணைய வசதிகளை முடக்குவது ஆகியவை ஜனநாயகத்தைப் பலவீனமாக்கிவிடும். பல இனம், மொழி, மதம் ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது இந்தியக் குடியுரிமைச் சட்டம்.  இந்தியா மேற்கொண்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் அதிருப்தி அளிக்கிறது. அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்ட முறை அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் அமைப்பினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். ”இந்த அறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும்” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து ஜோ பிடன் தேர்தல் நிதிக் குழு உறுப்பினருமான அஜய் ஜெயின் புடோரியா, “சிலர் அளித்த அழுத்தம் காரணமாகவே காஷ்மீர் குறித்த தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஜோ பிடன் அமெரிக்க துணை அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படத் துணை நின்றார். இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பற்றியும் நன்கு புரிந்துவைத்திருக்கிறார்” என்று விளக்கமளித்துள்ளார். 

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் காஷ்மீர் குறித்த அவரது கொள்கை இந்தியாவுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments