திருச்சி மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

0 1643

திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள், குடிமராமத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணியளவில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடம், சமயபுரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியர்களுக்கான தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுபணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் 20 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார்.

சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளம்பெற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அப்போது முதலமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments