எப்.எம். ரேடியோவில் குண்டு வைத்து சகோதரர் கொலை..! கே.டி. பிரதர் கைது

0 4513

சேலம் அடுத்த பனமரத்துபட்டியில் எப்.எம்.ரேடியோவில் எலக்ட்ரானிக் வெடிகுண்டு வைத்து அண்ணனே, தம்பியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி பகுதியை சேர்ந்தவர் 59 வயது விவசாயி மணி. இவர் கடந்த 17ஆம் தேதி தனது விவசாய தோட்டத்துக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் வெள்ளை நிற கைப்பை ஒன்று கிடந்தது.

அதில் எப்.எம் ரேடியோ மற்றும் மிக்சர் பாக்கெட் மது பாட்டில்கள் ஆகியவை இருந்தன.

யாரோ குடிமகன், தவறவிட்டுச்சென்று விட்டதாக நினைத்து கைப்பையை எடுத்த மணி தனது வீட்டிற்கு எடுத்து வந்து எப்எம் ரேடியோவை ஆன் செய்தார். அப்போது ரேடியோ பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அதே இடத்தில் மணி உடல் பாகங்கள் சிதறி பலியானார்.

வீட்டின் மேற்கூறை மற்றும் ஜன்னல் உடைந்து சிதறியதில் மணியின் வீட்டிலிருந்த அவரது பேத்தி, உறவினர்கள் வசந்த குமார், நடேசன் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பலியான மணியின் அண்ணன் செங்கோடன் என்பவர் கடந்த மூன்று நாட்கள் முன்பு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய செங்கோடனை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் விவசாயி மணியின் மரணத்துக்கான மர்மம் விலகியது. தனக்கு சொந்தமாக உள்ள நிலத்துக்கு செல்வதற்கு, பலியான சகோதரர் மணியின் நிலத்தின் வழியாக செல்ல நடை பாதைக்கு, அனுமதிக்க வேண்டும் என செங்கோடன் கேட்டதாகவும், அதற்கு மணி கொடுக்க மறுத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் அண்ணன் தம்பிக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பலமுறை செங்கோடன், மணியிடம் சென்று தனக்கு நடைபாதை வழிவிட வற்புறுத்தியும் வழிகிடைக்காத ஆத்திரத்தில் மணியை கொலை செய்வது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, நாமகிரிப்பேட்டை சென்று அங்குள்ள வெடி பொருட்கள் விற்கும் கடையில் கிணறு வெட்டுவதற்காக என்று டெட்டனேட்டர்களையும், ஜெலட்டின் குச்சிகளையும் வாங்கியுள்ளார் செங்கோடன்.

சேலம் புதிய பேருந்து நிலையம் சென்று, அங்குள்ள கடையில் எப்.எம். ரேடியோ ஒன்றை 900 ரூபாய்க்கு வாங்கிய செங்கோடன், வீட்டுக்கு வந்து, பின்னர், எலக்ட்ரிகல் பணியில் முன் அனுபவம் இருந்ததால், எப்எம் ரேடியோவை கழற்றி அதற்குள் பாறைகளை உடைக்க பயன்படும் ஜெலட்டின் குச்சியை டெட்டனேட்டருடன் இணைத்து எப்.எம் ரேடியோவை ஆன் செய்தால் அது வெடிக்கும் வகையில் அதனை ஒரு எலக்டானிக் வெடிகுண்டு போல தயார் செய்துள்ளார்.

வெடிபொருட்கள் பொறுத்தப்பட்ட எப்.எம்.ரேடியோவை ஒரு பையில் வைத்து மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுக்களையும் போட்டு எடுத்துக்கொண்டு மணியின் தோட்டத்துக்குள் கடந்த 17ஆம் தேதி வீசி சென்று உள்ளார்.

இந்த கைப்பையை பார்த்த மணி அதை வீட்டுக்கு எடுத்து வந்து எப்.எம் ரேடியோவை கேட்கும் ஆவலில் ஆன் செய்தபோது குண்டு வெடித்து அவர் துடிதுடித்து இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

செங்கோடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின்குச்சிகளை விற்பனை செய்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி முருகன் என்பவரையும், எப்எம் ரேடியோ விற்ற கடைக்காரரும் கைது செய்யப்பட உள்ளதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் தெரிவித்தார் .

இறுதியில் எல்லோருக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் என்பதை கூட உணராமல் சொந்த தம்பியை வெடிகுண்டு வைத்து வெடிகுண்டு வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments