சிறை மரணம்:நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்

0 6533

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் மரணத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்த நிலையில், பென்னிக்ஸ் மாரடைப்பாலும், ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

போலீசாரால் தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய குடும்பத்தினர் போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தி சாத்தான் குளம் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று முதலே போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும், தந்தை, மகனின் மரணத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. இதனை தொடர்ந்து, சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸின் ஆகிய இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் உடற்கூராய்வுக்கு முடிந்து குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள் சங்கம் சார்பில் போராட்டம் வலுத்து வருகிறது.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளிலும் சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 90% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை மார்க்கெட் காய்கறிகடைகளும் மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூடியுள்ள வியாபரிகள், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சிறையில் விசாரணை கைதியாக இருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உயிரிழப்புக்கு நீதி கோரியும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செல்போன் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments