துபாயின் துணிச்சலான முடிவு; விமானப்பயணம் தொடக்கம்; ஜூலை 7 முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி!

0 6638

மீரகத்தின் முக்கிய நகரான துபாயில் இன்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 7- ந் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளும் சில நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாதங்களாக முடங்கிக் கிடந்த துபாய் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. துபாய் குடியுரிமை வைத்துள்ள வெளிநாட்டவர்களும் தங்கள் நாட்டுக்கு திரும்ப அந்த நாடு அனுமதியளித்துள்ளது. துபாய் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் பல நாடுகளில் தவித்து வருகின்றனர். அந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அமீரக அரசு எடுத்துள்ளது. அமீரகத்தின் குடியுரிமை வைத்துள்ள இந்தியர்களும் விமானப்பயணம் தொடங்கி விட்டால், துபாய் செல்ல இனிமேல் தடை இல்லை. துபாய் வரும் மக்கள் சமீபத்தில் பெறப்பட்ட கோவிட் நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' துபாய் அரசின் பொது வசிப்பிடம் மற்றும் வெளியுறவு இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். விமான சேவை நிறுவனங்களும் இயக்குநரகத்திடம் விசாரணைக்கு பிறகே டிக்கெட்டுகளை வழங்கும். இது தவிர ஜூலை 7- ந் தேதி முதல் துபாய்க்குள் சுற்றுலாப்பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள். 96 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கோவிட் நெகடிவ் சான்றிதழ் சுற்றுலாப்பயணிகளிடத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்தில் பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கப்படும்.

துபாய் குடியுரிமை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் COVID-19 DXB என்ற ஆஃப்பில் தங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் முறையாக பதிந்திருக்க வேண்டும். கோவிட் டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை, அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். பாசிடிவ் ரிசல்ட் வருபவர்கள் 14 நாள்கள் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள். கோவிட் பாசிடிவானவர்களுக்கு பணி வழங்கும் நிறுவனத்தினர் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். அல்லது பணம் கட்டி அரசு ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். கோவிட் அறிகுறி உள்ளவர்களை விமானத்தில் ஏற்றுவதை தடுப்பதை விமான சேவை ஊழியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுலா விசாவில் வருபவர்கள் தகுதியான சர்வதேச இன்சூரன்ஸை பெற்றிருக்க வேண்டும்'' என்று அமீரக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments