ஆன்லைன் வழியில் பாடம் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து செல்போன்களை பார்ப்பதால் பாதிப்பு ஏற்படுமா? பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 6194

ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து செல்போன்களை பார்ப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை தலைவர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக வகுப்புக்களை நடத்தி வருவதை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துவதாகவும், மொபைல் ஃபோன், லேப்டாப் போன்ற கருவிகளை தொடர்ச்சியாக பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, 5ஆம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தக் கூடாது, அந்த இரண்டு மணி நேரத்தில் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவெளி அளிக்க உத்தரவிட வேண்டும், இது தொடர்பாக அரசு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக மத்திய அரசு வகுத்த வரைவு விதிமுறைகளை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கண் பாதிப்பு தொடர்பாக கண் மருத்துவ நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளால், மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீன், ஜூன் 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments