கொரோனா தடுப்பில்.. தன்னார்வலர்களின் பணி..!

0 1261

சென்னையில் கொரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையானவற்றை வழங்க 4,500 தன்னார்வலர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றைத் தடுப்பதில் தன்னார்வலர்களின் பங்களிப்பு என்ன? அவர்களின் அன்றாடப் பணி என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி, அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் இன்றியமையாத் தேவைகளுக்காக வெளியில் வருவதால் பலருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவு செய்யத் தன்னார்வலர்கள் நாலாயிரத்து 500 பேர் களமிறங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் வீட்டிற்கே சென்று தேவையானவற்றை வழங்க வேண்டும் என்பதால், இளம் வயதினர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஊரடங்கால் வேலையிழந்த இளைஞர்கள் பலருக்கும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இந்தப் பணி, நல்ல வாய்ப்பு என்கின்றனர். உரிய பாதுகாப்புடன் நோயாளிகளின் வீட்டிற்குச் செல்வதால், நோய்த் தொற்று குறித்த அச்சம் இல்லை என்கின்றனர் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்து வரும் பெண்கள்.

ஒவ்வொரு தன்னார்வலருக்கும் வீட்டுத் தனிமையில் உள்ள 10 பேரைக் கவனித்துக் கொள்ளும் பணி வழங்கப்படுகிறது. எந்தக் காரணத்துக்காகவும் நோயாளிகள் வெளியில் வராமல் பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு.

தன்னார்வலரின் செல்போன் எண், வீட்டுத் தனிமையில் இருப்பவருக்கு வழங்கப்படுவதால் அவர்களைத் தொடர்புகொண்டு அரிசி, காய்கறி, பால் ஆகிய இன்றியமையாப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அதே போல் வீடு வீடாகச் சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதித்து அறிகுறி உள்ளோரைத் தொடக்க நிலையிலேயே மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளிலும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments