சப் இன்ஸ்பெக்டர் பைக்கில் இருந்து.. சாவியை பறித்த சிறுவன்..! தாய் பாசத்தால் ஆவேசம்

0 19171

ஊரடங்கை மீறி ரோட்டில் சாப்பாட்டுக்கடை நடத்தியதை கண்டித்த போலீஸ் உதவி ஆய்வாளரின் பைக்சாவியை சிறுவன் ஒருவன் பறித்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. தனது செல்போனை பறித்ததால் ஆவேசம் அடைந்து போலீசாருடன் சிறுவன் மல்லுக்கட்டிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருபவர் வேலுமயில். இவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் செல்லமணி, தனி நபர் இடைவெளியில்லாமல் கும்பலாக எல்லோருக்கும் சாப்பாடு விற்பதால் கொரோனா பரவும் என்றும் , வயித்து பொழப்ப விட உயிர்தான் முக்கியம், அவனவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேலை பார்க்கிறான், கடையை உடனடியாக மூடுங்கள் என்றார். அதற்கு வேலுமயிலின் மனைவி சாப்பிட்டால் தான் உயிர்வாழ முடியும் என்பதால் கடை நடத்துவதாக பதிலுக்கு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் இரவு 9 மணிவரை தான் கடை திறக்க அனுமதி, இப்போது 8 மணி ஆவதால் கடையை எடுத்து வைக்க கூறினார் செல்லமணி. அதற்கு கடையை மூட மறுத்து காவல்துறையினருடன் சரிக்கு சமமாக வேலுமயிலும் அவரது மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அவர்களது மகன் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தான். இதனை கவனித்து விட்ட காவல் உதவி ஆய்வாளர் அவனிடம் சென்று தனது வீடியோக்களை அழிக்குமாறு கூற, அவனும் அழித்து விட்டதாக கூறினான். அந்த செல்போனை வாங்கி பார்த்த போது அந்த செல்போனில் வேலுமயிலின் மனைவியிடம் காவல் உதவி ஆய்வாளர் வாக்குவாதம் செய்யும் சில வீடியோக்கள் இருந்தது.

இதையடுத்து அந்த செல்போனை, காவல் நிலையம் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிய உதவி ஆய்வாளர் செல்ல மணி, தனது பைக்கில் ஏறிபுறப்பட தயாரானார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அந்த சிறுவன் உதவி ஆய்வாளரின் பைக் சாவியை பறித்து எடுத்துக் கொண்டதால் அவர் பைக்குடன் சரிந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் ஆவேசமான உதவி ஆய்வாளர் சிறுவனிடம் இருந்து சாவியை வாங்க முயற்சிக்க, அவன் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்ததால் அங்கு கைகளப்பு ஏற்பட்டு அந்த இடமே களேபரமானது.

போலீசார் சிறுவனை காவல் நிலையம் அழைத்து செல்ல முயற்சிக்க, தனது மகனை போலீசிடம் இருந்து விடுவிக்கும் நோக்கில் அவனது தாய், தந்தை இருவரும் தடுத்து கூச்சலிட்டதால், அங்கு கூட்டம் சேர, போலீசாரால் அந்த சிறுவனை அழைத்து செல்ல இயலவில்லை.

இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனம் வரழைக்கப்பட்டு காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்ட சிறுவனை வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்த போது அந்த சிறுவன் ஒழுக்கமான நடவடிக்கையை கொண்டவர் என்பது தெரியவந்தது.

அந்த சிறுவன் தனது தாய் தந்தை மீது கொண்ட பாசத்தால் ஆவேசமாகி போலீசாரிடம் இப்படி நடந்து கொண்டது தெரியவந்தது. சிறுவனின் எதிர்காலம் கருதி மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு அவன் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் தள்ளுவண்டியில் கடை நடத்திவந்த பள்ளி மாணவனின் தந்தை வேலுமயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக சாதாரண சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அனுப்பிவைத்தனர்.

கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சாலையோரம் உணவகம் நடத்துவோர், போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கினாலே வீணான சச்சரவுகளை தவிர்க்கலாம். அதே நேரத்தில் கண்ணியம்மிக்க காவல்துறையினரும் பொது இடத்தில் வைத்து இது போன்ற கைகலப்புகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments