மதுரையில் முழுஊரடங்கு..!

0 14770

கொரோனா பரவலைத் தடுக்க மதுரை மாநகராட்சியிலும் அதையொட்டிய ஊரகப் பகுதிகளிலும் ஜூன் 24 அதிகாலை முதல் 30 ஆம் தேதி இரவு 12 மணி வரை 7 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், மதுரை மாநகராட்சியிலும் பரவை பேரூராட்சியிலும், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் ஜூன் 24 முதல் 30 வரை 7 நாட்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்துக் கடைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவம் தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும். ஆட்டோ, வாடகைக் கார், தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. 

வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய நாட்களில் மட்டும் 33 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்படும். நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்துக் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம். நடமாடும் காய்கறிக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம். இன்றியமையாப் பொருட்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டருகே உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். உணவகத்தில் உணவுகளைப் பொட்டலமாக வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மேற்குறிப்பிட்ட எந்தத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். பால் வழங்கல் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments