‘எல்லையில் அத்துமீறும் சீனா...’ ரஷ்யாவுக்குப் பறந்தார் ராஜ்நாத் சிங்!

0 3208

ந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று காலை ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தில் ராஜ்நாத் சிங், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மாஸ்கோவில் நடைபெறும் சோவியத் யூனியன் ஜெர்மனியின் நாசி ராணுவத்தை வெற்றிகொண்டதன் 75 - வது ஆண்டின் ராணுவ அணிவகுப்பிலும் பங்கு கொள்கிறார். 

சமீப காலமாக இந்தியாவின் வடக்கு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எப்போதுமில்லாத வகையில் லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கைகலப்பில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். இதனால், இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராஜ்நாத் சிங், இந்தப் பயணம் குறித்து டுவிட்டரில், "மூன்று நாள் பயணமாக மாஸ்கோவிற்குப் புறப்படுகிறேன். இந்தப் பயணம் இந்தியா - ரஷ்யா இடையேயான பாதுகாப்பு மற்றும் ஆழமான உறவு குறித்து பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்துடன் ரஷ்யாவின் 75 - வது ஆண்டுவிழா ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இந்தப் பயணத்தில் பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய் குமாரும் ராஜ்நாத் சிங்குடன் செல்கிறார்.

ராஜ்நாத் சிங், இந்தப் பயணத்தில் சீனாவின் அத்துமீறல், எல்லையில் ஏற்படும் பதற்றமான சூழல் குறித்து ரஷ்யாவுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையில் மோசமான சூழல் நிலவும் வேளையில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனாவின் தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில்  கலந்துகொள்கிறார்கள். ஆனால், இந்தியா -  சீனா இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments