சொத்துக்காக தாயையும் சகோதரியையும் கொலை செய்த பெண்.. இரட்டைக் கொலையின் பகீர் பின்னணி

0 8114

பெரம்பலூர் அருகே தாயும் மகளும் தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக தாயையும் சகோதரியையும் மகனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவருக்கு தனலட்சுமி, வள்ளி, ராஜேஸ்வரி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2வது மகள் வள்ளி திருமணமாகி அதே ஊரில் தாயாரின் வீட்டிற்கு அருகே 14 வயது மகன் வினோத்குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். 3வது மகள் ராஜேஸ்வரிக்கும் திருமணமான நிலையில் ஒன்பது வயது மகன் விஷாலுடன் தாயார் ராணியுடன் வசித்து வந்துள்ளார். வள்ளி மற்றும் ராஜேஸ்வரியின் கணவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே கடன் சுமையால் தவித்து வந்துள்ள வள்ளி, அவ்வப்போது தனது தாயாரிடம் சொத்தை பிரித்து தந்து கடனை அடைக்க உதவி செய்யுமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி காலை தாயார் வீட்டு வாசலில் கோலம் போட சென்ற வள்ளி, தனது தாயும் சகோதரி ராஜேஸ்வரியும் குடும்ப பிரச்சனையால் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கதறி அழுது ஊரைக் கூட்டியுள்ளார். தகவலறிந்துச் சென்ற போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஸ்வரி தனது தாயாரின் நகைகளை அடகு வைத்து செலவு செய்ததால், அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் சந்தேகித்தனர். ஆனால் ராஜேஸ்வரி கழுத்து உள்ளிட்ட இடங்களில் நகக் கீறல்கள் இருந்ததால், வள்ளியை சந்தேக வளைத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

தாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இளைய மகள் ராஜேஸ்வரியை மட்டும், தன்னுடன் வைத்துக்கொண்டு பல்வேறு வகையில் உதவி செய்து வந்ததால் இருவர் மீதும் வள்ளி கோபம் அடைந்துள்ளார்.

சொத்து கிடைக்காத விரக்தியில் தாயை தீர்த்துக்கட்டுவது என்று தவறான முடிவு எடுத்த வள்ளி, 18ஆம் தேதி இரவு இருமலால் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாய் ராணிக்கு மருந்து எனக் கூறி விஷத்தை குடிக்க வைத்தாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, மேலும் ஒரு மூடி விஷத்தை வாயில் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார் வள்ளி.

இதனை பார்த்துவிட்ட சகோதரி ராஜேஸ்வரியை தனது 14 வயது மகனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு வழக்கம் போல் பக்கத்து தெருவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் காலை கோலம் போட வருவது போன்று ஊரைக் கூட்டி தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வள்ளியையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது 14 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments