ஏற்றுமதி பொருள்களுக்கு 97 சதவிகித வரிச் சலுகை! சீனாவின் பிடியில் சிக்குகிறதா வங்கதேசம்?

0 11829

ங்கதேசத்திலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 5161 பொருள்களுக்கு 97 % வரி விலக்கு  அளித்திருக்கிறது சீனா. வங்கதேசத்துக்கு அளித்திருக்கும் இந்த ஜாக்பாட் சலுகை மூலம் வங்கதேசத்துடனான உறவைச் சீனா மேலும் வலிமைப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், நேபாளம் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராகத் திருப்பியிருக்கும் சூழலில் வங்கதேசத்தையும் இந்தியாவுக்கு எதிராக மாற்றும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்தியா - சீனாவுக்கு இடையே லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் பிரச்னை நீடித்து வருகிறது. ஜூன் 15 - ல் நடந்த கைகலப்பில் இரு தரப்பிலும் மரணம் நிகழ்ந்தது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, காலாபாணி ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன்  இணைத்து தன்னிச்சையாக புதிய வரைபடத்தைத் திருத்தி அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றத்தை மேற்கொண்டது, நேபாளம். தனது ராணுவ வீரர்களை இந்திய எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் எல்லைப் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்தல், ராணுவ முகாம்களை அமைக்கும் பணியில் நேபாளம் ஈடுபட்டு வருகிறது . இந்த சூழலில் பாகிஸ்தான் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் 

image

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது,  எடுத்த ராணுவ நடவடிக்கையால் வங்கதேசம் எனும்  புது நாடு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உதயம் ஆனது. அப்போதிருந்து, வங்கதேசம் இந்தியாவுக்குத் தவிர்க்க முடியாத நட்பு நாடாக விளங்கி வருகிறது. நேபாளத்தை நமக்கு எதிராக திருப்பியது போல, வங்க தேசத்தையும் இந்தியாவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. 

கொம்பு சீவும் நடவடிக்கையின்  ஒரு பகுதியாக, சீனாவுடன் வங்கதேசம் வர்த்தகம் செய்யும் 5,161 பொருள்களுக்கு 97 % வரி விலக்கு அளித்திருக்கிறது சீனா.  இது குறித்து வங்க தேசம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஜூன் 16 -  ம் தேதியன்று சீன நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு  97 % வரி விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜூலை 1 - ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளது.

image

ஏற்கெனவே, வங்கதேசம் ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில்  3095 பொருள்களுக்கு வரிச்சலுகை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சீனா அளித்திருக்கும் புது சலுகை மூலம் மொத்தம் 8256 பொருள்களுக்கு வங்கதேசம் வரிச் சலுகை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 15 - ல் இந்தியாவும் சீனாவும் மோதிக்கொண்ட நிலையில் அடுத்த நாளே வங்கதேசத்துக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது சீனா. இதன்மூலம் டாக்கா - பெய்ஜிங் இடையேயான உறவு மேலும் வலுப் பெற்றிருக்கிறது.  வங்கதேசத்தையும் சீனா கைக்குள் போட முயற்சிப்பது இந்தியாவுக்கு தலைவலியாகவே அமையும். இதை போல வறமையில் வாடும் ஆப்ரிக்க நாடுகளிலும் சீனா தன் பண பலத்தால்  கட்டுக்குள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments