கேரள சுகாதாரத்துறை அமைச்சரை' கோவிட் ராணி' என்று காங்கிரஸ் விமர்சித்ததால் சர்ச்சை!

0 2084
கே.கே. ஷைலஜா

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜாவை , 'கோவிட் ராணி ' என்று கேலியாக குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே. ஷைலஜா. டீச்சராக இருந்து அமைச்சரானவர். இவரை, இன்னும் பலரும் ஷைலஜா டீச்சர் என்றே அழைப்பார்கள். கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவாமல் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இவர் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஒரு கூட்டத்தில் பேசிய போது, '' கேரளாவில் நிபா வைரஸ் பரவிய போது , கோழிக்கோட்டில் முகாமிட்டிருந்த கே.கே. ஷைலஜா, நிபா ராஜகுமாரி என்ற பட்டத்தை பெற முயன்றார். கோழிக்கோட்டில் ஒரு கெஸ்ட் ஆர்டிஸ்ட் போல நடித்துக் கொண்டிருந்தார். தற்போது நிபா ராஜகுமாரியிலிருந்து கோவிட் ராணியாக அவர் உயர்ந்துள்ளார்'' என்று விமர்சித்தார்.

முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் இந்த விமர்சனம் கேரள அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநில பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டுள்ள வீடியோவில்,'' ஷைலஜா டீச்சரின் பணிகளை இந்த உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் கீழ்த்தரமான வார்த்தைகளால் ஷைலஜாவை விமர்சித்துள்ளார். இவரைப் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பது கேரளாவுக்கே இழுக்கு. பேன்டமிக் காலத்தில் வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் பெண் அமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரின் கலாசரம். ஆனால், இது வெட்கக் கேடான செயல் '' என்று கடுமையாக சாடியுள்ளார்

முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தன் பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த கேரள நர்ஸ் லினியின் கணவர் சஜீஷ் , ''நிபா வைரஸ் காரணமாக கோழிக்கோடு பரிதவித்துக் கொண்டிருந்த போது முல்லப்பள்ளி ராமச்சந்திரன் எந்த உதவியும் செய்யவில்லை. என் மனைவி அந்த வைரஸ் தாக்கி உயிரிழந்தார். ஆனால், போன் செய்து கூட ராமச்சந்திரன் துக்கம் விசாரித்ததில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு சோசியல் மீடியாக்களிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது. சிலர், #MullappallyShouldApologise என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments