இந்திய எல்லைக்குள் ஊருடுவ முயன்றவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக பிரதமர் பெருமிதம்....

0 4556

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீனா ஊடுருவவில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு இந்திய வீரர்கள் தக்க பாடம் புகட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலை நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், சோனியாகாந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்றும் இந்திய நிலையையும் கைப்பற்றவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய விமானப்படையின் தாக்குதல் திறன் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்புக்குத் தேவையான ஆயுதங்கள், போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்பு கண்காணிக்கப்படாத பகுதிகளைக் கூட தற்போது கண்காணித்து வருவதாகக் கூறிய மோடி, நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முப்படைகள் எடுத்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எல்லைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்பால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடும் திறன் அதிகரித்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments