முழு ஊரடங்கு.. தீவிரமாக அமல்..! வெறிச்சோடிய சாலைகள்

0 3088

முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க தெருக்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கெடுபிடிகள் காரணமாக வாகனப் போக்குவரத்தும் குறைந்து, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

உச்சம் தொட்ட கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குறிப்பாக, பெரு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முந்தைய ஊரடங்கை காட்டிலும் இந்த முறை, முழு ஊரடங்கு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரதான அண்ணாசாலை, முழுமையாக மூடப்பட்டது. அண்ணா சாலை - திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் போலீசாரின் வாகன தணிக்கையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வை யிட்டார்.

இதேபோல, கடற்கரை காமராஜர் சாலையும் தடுப்புகளால் அடைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் அரசு ஊழியர்களின் வாகனம் தவிர, தனிநபர்வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய மேம்பாலங்களும் மூடப்பட்டன.

சென்னையில் 288 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 18 ஆயிரம் போலீசார், இரவு - பகலாக பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். அதிக கெடுபிடி காட்டப்பட்டதால், வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்திருந்தது. வடசென்னையின் வண்ணாரப்பேட்டை, தென் சென்னையின் அடையாறு மற்றும் மெரீனா, அண்ணா சாலையிலும் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் மூலமாகவும் போலீசார் கண்காணித்தனர்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்டவைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. ஜவுளி கடைகள், நகைக்கடைகள், ஷாப்பிங் மால்கள், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஹோட்டல்கள் திறந்திருந்தாலும், பார்சல் உணவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.தேநீர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், டீ மற்றும் காபி பிரியர்கள் மிகவும் தவித்தனர். பிரதான பிராட்வே பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப் பட்டது.

அங்காடித்தெரு என அழைக்கப்படும் தியாகராயநகர் - ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு, பர்கிட் சாலைகளில் இயங்கிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மொத்தத்தில், முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை காட்டிலும் இந்த முழு ஊரடங்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 11 நாட்களும், மக்களின் ஒத்துழைப்பு கொடுத்தால், மிரட்டும் கொரோனாவை நிச்சயம் ஓடுக்க முடியும் என சுகாதாரத்துறை யினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments