சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய தீவிர பரிசோதனை..!

0 1022

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் சென்னை மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர், ஆயிரம் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, வீடுகளுக்கே சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என்று பரிசோதனை நடத்தப்படுகிறது. அதற்காகவே ஒவ்வொரு வார்டுக்கும் தனி குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இளநிலை பொறியாளர், உதவி இளநிலை பொறியாளர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர் அடங்கிய குழுவினர் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தெருத்தெருவாக சென்று சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் நோய் தொற்று கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த குழுவினருக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர், ஆயிரம் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன.

தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையையும், பல்ஸ் ஆக்சி மீட்டர் உதவியுடன் ஆக்சிஜன் செறிவு, சுவாசம், நாடித்துடிப்பை தெரிந்து ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்றை கண்டறிய முடியும்.

உடல் வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு செல்ல இந்த குழுவினர் அறிவுறுத்துகின்றனர். தற்போது சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த மருத்துவ முகாமுக்கு அனுப்பப்படும் நபர்களுக்கு இருப்பது சாதாரண காய்ச்சல், சளியா என்று பரிசோதிக்கப்படுகிறது. சாதாரணமானது தான் என்று தெரியவந்தால் அங்கேயே மருத்துவர்கள் மருந்து வழங்குகின்றனர். கொரோனா அறிகுறி இருந்தால் மட்டும் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படுகின்றனர். 

இதனிடையே, சூளைமேட்டில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவருக்கு பரிசோதனை செய்த போது, உடல் வெப்ப நிலை இயல்பை விட கூடுதலாக இருந்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்து அவர் தகராறில் ஈடுபட்டார்.

சுகாதார குழுவினர் தங்களது கடினமான பணிச்சூழல் குறித்தும், அருகில் இருந்த மற்றவர்கள் கொரோனா பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்ததை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments