கொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் மைக்ரோ குழு..!

0 2969

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள மைக்ரோ குழுவின் செயல்பாடுகள் என்ன? கொரோனா பரவலை எப்படி இந்த குழு கட்டுப்படுத்துகிறது என்பன குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் சில நூறுகளில் இருந்த கொரோனா நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஆயிரங்களில் உயர்ந்து வருகிறது. எனவே நோயைக் கட்டுப்படுத்தும் பணியும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

சென்னை போன்று தினமும் அசுர வேகத்தில் கொரோனா அதிகரித்து வரும் இடங்களில் கட்டுப்படுத்தும் சவாலான பணியினை மேற்கொள்ள அரசிற்கு புதிய யுக்திகளும், திட்டங்களும் அவசியம்.

அந்தவகையில் புதிய திட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள வார்டு வாரியான மைக்ரோ குழு, ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணித்து வருகிறது.

ஒவ்வொரு வார்டிலும் தனி தனி துறைகளின் கீழ் இயங்கிவந்த துறை அதிகாரிகளை மைக்ரோ குழுவாக ஒன்றிணைத்து, ஒற்றை குடையின் கீழ் கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் செயல்படும் படி சென்னையில் உள்ள 200 வார்டிலும் 200 மைக்ரோ குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மைக்ரோ குழுவிலும், வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு தனிமனிதரையும் கணக்கெடுத்து, கண்காணித்து மருத்துவ தேவை உள்ளோரை கண்டறிந்து மாநகராட்சியின் கொரோன கண்காணிப்பு செயலியில் பதிவேற்றம் செய்யும் களப்பணியாளர்கள் குழு, மருத்துவ முகாம், நடமாடும் பரிசோதனை மற்றும் மருத்துவ மைய வாகனம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவ குழு, நோய் பாதிப்படைந்தோர் உரிய சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு அவர்களை கண்காணிக்கும் சுகாதார குழு, வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி தர தன்னார்வலர்கள் குழு

கிருமி பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளித்தல், கொரோன பாதிப்புள்ள தனிமைபடுத்தபட்ட வீடுகளில் இருந்து மஞ்சள் நிற பையில் தனியாக குப்பை சேகரித்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் குழு, மற்ற குழுக்களுடன் இணைந்து பணியாற்றவும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் NGO குழு உள்ளிட்ட குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடு வீடாக ஒவ்வொரு தனிமனிதனும் 200 வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு நோய் தொற்றில் இருந்து காபந்து செய்யப்படுகிறார்கள்.

அரசு ஒரு புறம் புது புது திட்டங்களை, யுக்திகளை வகுத்து களத்தில் பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது வேலை செய்து வரும் சூழலிலும், சிலர் தனிமை படுத்தப்பட்ட வீட்டினுள் இருந்து அவ்வப்போது வெளியே செல்வது, கொரோன பாதிப்பால் வீட்டு தனிமைப்படுதலில் உள்ள வீட்டு குப்பைகளை சாதாரண குப்பைகளுடன் வீசுவது, களபணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தங்களை கணக்கெடுக்க நீங்கள் யார் என கேள்விகள் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் மனம் தளராது மக்களுக்காகவும் கொரோனாவிற்கு எதிராகவும் பணியாற்றி வருவதாக கோட்ட உதவி பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments