'என் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்!'- ரிலையன்ஸ் முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமானதால் முகேஷ் அம்பானி பெருமிதம்!

0 10163

ஜியோ பங்குகளை  விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றிலிருந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி திரட்டல் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்  நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது.

image

கடந்த வருடம் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம், "மார்ச் 31 - ம் தேதி 2021 - ம் ஆண்டில் நிகர கடன் எதுவுமின்றி இருக்கும்" என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த நிலையைக் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே நிறைவேறியிருக்கிறது என்று முகேஷ் அம்பானி பெருமைப்பட்டிருக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் மதிப்பு 31 மார்ச் 2020 - ன் படி 1,61,035 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி அளவுக்கு முதலீட்டையும், உரிமை வெளியீட்டிலிருந்து 53,124 கோடி ரூபாய்க்கு மேல் நிதியையும் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் குழுமம். இதன் மூலம் நிகர கடன் இல்லாத நிலையை ரிலையன்ஸ் ஜியோ குழுமம் பெற்றிருக்கிறது.

image

"உலகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மூலதன நிதியைத் திரட்டியதில்லை. இந்த சம்பவம் இதற்கு முன்பு நடைபெற்றதும் இல்லை. உலகமே கோவிட - 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. மொத்த நிதி திரட்டல் ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது" என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்யுடி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்ட்டிக், கேகேஆர், முபாடாலா, அடியா, டிபிஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி அளவுக்கு முதலீட்டைப் பெற்றிருக்கிறது.

image

"கடந்த சில வாரங்களாக, ஜியோவுடன் கூட்டுச்சேர்வதில் உலகளாவிய நிதி முதலீட்டாளர் சமூகத்தின் தனித்துவமான ஆர்வத்தால் நாங்கள் பெருமையடைந்துள்ளோம். பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது  என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மரபணுவில் பதிந்த விஷயமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம், நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறிய பெருமைமிகு சூழலில், ரிலையன்ஸ் அதன் பொற்காலத்தில் இன்னும் லட்சிய வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெறுவோம். நிறுவனர் திருபாய் அம்பானியின் கனவுகளையும் நிறைவேற்றுவோம். இந்தியாவின் வளர்ச்சியில் நம் பங்களிப்பைத் தொடர்ந்து அதிகரிப்போம்" என்று கூறியிருக்கிறார் முகேஷ் அம்பானி.  

இந்தியாவில் கடனே இல்லாத முதல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments