நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அதி தீவிரமாக கடைபிடிப்பு..!

0 7093

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நள்ளிரவு முதல், முழு ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 12 நாட்கள் நீடிக்கும் ஊரடங்கின்போது, என்னென்ன இயங்கும், என்னென்ன இயங்காது என்பது குறித்து பார்க்கலாம்...

உச்சம் தொட்டு அச்சம் தரும் கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குப்பட்ட பகுதிகளிலும், அதையொட்டிய சில புறநகர் பகுதிகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்த 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேநேரம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும், முன் அனுமதி பெற்றிருந்தால் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மத்திய அரசு அலுவலகங்களும் 33 சதவீத ஊழியர்களோடு செயல்படலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டு, பணிக்கு வரத்தேவையில்லை.

வருகிற 29 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் மட்டும் வாடிக்கையாளர் சேவையை கருத்தில் கொண்டு, 33 சதவீத பணியாளர்களுடன் வங்கிகள் செயல்படும். 20ஆம் தேதி முதல், 26ஆம் தேதி வரை, நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வங்கிகள் சேவையளிக்கும்.

பொதுவிநியோக கடைகளை பொறுத்தவரை, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, பணியாளர்களே அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வீடு தேடி சென்று வழங்குவார்கள்.

காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தனிநபர் இடைவெளியோடு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். இதேபோல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி உண்டு. ஆனாலும், ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து உரிய அடையாள அட்டையை வாங்கி, வைத்திருக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கை அதி வேகமாக உயருவதால், முழு ஊரடங்கை, அதி தீவிரமாக கடைபிடிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, முழு ஊரடங்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments