சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்

0 5371

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த  தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டுமென சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்களுக்கும், காவல்துறைக்கும்  தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதையடுத்து அத்தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்கவும், பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும்  19ம் தேதி இரவு முதல் 30ம் தேதி வரை சென்னை காவல்  எல்லைக்கு உட்பட்ட பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இதையொட்டி, முழு ஊரடங்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை நகர காவல்துறை பகுதியில் பன்முக சோதனை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதில் அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தை மேற்கண்ட பகுதிகளில் முழுவதும் கட்டுப்படுத்தவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இக்காலத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதோடு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைபடுத்தப்பட்ட வீடுகளை தீவிரமாக கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே, பிறருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும், தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும், வீடுகளுக்கும் அத்தியாவசிய பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்து முழு ஊரடங்கை முழுவதும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் மாவட்ட நிர்வாகமும், பெருநகர மாநகராட்சி நிர்வாகமும், பொதுமக்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டுமெனவும், இதற்காக காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், பெருநகர மாநகராட்சி நிர்வாகமும் ஆட்டோவில் ஒலிபெருக்கியை பொருத்தி, அதன் மூலம் குரல் பதிவை, சந்தைகள் போன்று கூட்டம் அதிகமுள்ள இடங்களில் ஒலிக்கச் செய்து பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் தலைமை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முழு ஊரடங்கு காலத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி, 3 மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை ஆகியவை  தனித்தனியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் தனது உத்தரவில் தலைமை செயலாளர் பட்டியலிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments