ஒரு ஸ்பூன் போதும்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'மேஜிக் சட்னி'... வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

0 8668

டல் நோய் எதிர்ப்பு சக்தியைப்  பெருக்கிக்கொள்வது மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் தினமும் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகளை அதிகம் சாப்பிடுதல், கபசுர குடிநீர்  பருகுதல், வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுதல் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். image

இந்த நிலையில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லவ்லீன் கௌர் (Lavleen Kaur) நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய, எளிதில் வீட்டிலே தயாரித்துச் சாப்பிடும் சட்னி ஒன்றின் சமையல் குறிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த சமையல் குறிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

" உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'ஒரு ஸ்பூன் மேஜிக்' ஒன்றை இனி சேர்த்துக்கொள்வோம். அந்த மேஜிக் வேறு ஒன்றும் இல்லை; ஒரு ஸ்பூன் சட்னி தான். இது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்" என்று சமையல் குறிப்போடு  கூறியிருக்கிறார்.

தேவையான பொருள்கள் :

மாம்பழம் - 1
பூண்டு - 3
இஞ்சி -  சிறிதளவு
வெங்காயம்  -  பாதியளவு
தக்காளி - 1
மாதுளை விதைகள் -  1 ஸ்பூன்
கறிவேப்பிலை -  சிறிதளவு
ஓமம் இலை - 5
துளசி இலை - 6
புதினா இலை -  1 கப்
கொத்தமல்லி இலை -  1 கப்
பச்சை மிளகாய் - 3
கல் உப்பு - தேவையான அளவு
புளி / சர்க்கரை - தேவைப்படின் சேர்த்துக்கொள்ளவும்.

image

செய்முறை :

மேலே கூறியிருக்கும் பொருள்கள் அனைத்தையும் நன்றாகக் கலந்து, பசையாகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்... மேஜிக் சட்னி ரெடி... தினமும் உணவு உட்கொள்ளும் போது சிறிதளவு இந்தச் சட்னியை தொட்டுக்கொண்டு  சாப்பிட்டால் உணவும் சுவையாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

இந்த சட்னி குறித்து கௌர் கூறுகையில்,'' இந்தச் சட்னியில் உள்ள மாம்பழம், தக்காளி, மாதுளம்பழ விதை மூலம் வைட்டமின் சி அதிகமாகக் கிடைக்கும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி - ஆக்சிடன்ஸ் ஆகியவை உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதில் பயன்படுத்தும் இலைகள் செரிமானப் பிரச்னையைப் போக்கும் '' என்றும் தெரிவித்திருக்கிறார் 
யாரெல்லாம் சாப்பிடலாம்?

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சரியாகும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.  சட்னியில் உள்ள வைட்டமின் சி - ஆனது உடலில் இரும்புச் சத்தை கிரகிக்க உதவும். ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்தச் சட்னி உகந்தது. கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்த்து விடுவது நல்லது என்றும் தெரிவித்திருக்கிறார்.

 வீட்டிலேயே இந்த மேஜிக் சட்னியைச் செய்து நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்வோம்... கொரோனா தொற்றிலிருந்து  தற்காத்துக்கொள்வோம்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments