விருதுநகரில் மணமகன் - சென்னையில் மணமகள்..! இ-பாஸ் இழுபறி.!

0 3179

சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அவரச தேவைக்கு என செல்ல இ - பாஸ் விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், ஒரு சில நாட்களில் விருதுநகரில் நடத்த திட்டமிட்டிருந்த தனது மகளின் திருமணத்திற்கு பல முறை விண்ணப்பித்தும் இ-பாஸ் ரத்து செய்யப்படுவதாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் சென்னை பெருநகர காவல் துறையில் 38 ஆண்டு காலம் பணி செய்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். ஊரடங்கு காரணமாக இவரது மகள் காயத்ரியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் சென்னையில் எளிமையான முறையில் வீட்டிலேயே நடந்துள்ளது.

இந்த மாதம் 24 -ஆம் தேதி மணமகன் ஊரான விருதுநகர் மாவட்டத்தில் எளிய முறையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக மணமகள் குடும்பத்தினர் ஏழு பேர் விருதுநகர் செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தும், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நிராகரிப்பதாக கூறுகின்றனர்.

குறித்த தேதியில் திருமணம் நடைபெறவில்லை என்றால் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனவும், காவல் துறையில் பணியாற்றி பல்வேறு துறைகளின் நடைமுறைகள் குறித்து தெரிந்த எனக்கே இ பாஸ் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது?, நிராகரித்த பின்னர் யாரை அணுக வேண்டும் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவிக்கிறார் சந்திரசேகர். இப்படி இருக்கையில் சாமானிய மக்கள் எவ்வாறு அவசர தேவைகளுக்காக விண்ணப்பித்து செல்ல முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிக்காக இ-பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஆவணங்கள் கொடுத்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாங்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இ- பாஸ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்த போது, விண்ணப்பதாரர் வசிக்கும் மாவட்டத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது எந்த மாவட்டத்திற்குச் செல்கிறார்களோ அந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது. ஆனால், சமீப நாட்களாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் அச்சத்தால் சென்னையில் இருந்து விண்ணப்பித்தாலே நிராகரிக்கப்படுவதாக அவசர தேவைகளுக்காக செல்ல வேண்டிய விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments