தூத்துக்குடி சிங்கங்களுக்கு மனிதநேய மாவுக்கட்டு…! கொஞ்ச பேச்சாடா பேசுனீங்க?

0 5758

மதுபோதையில் இருந்த  நண்பரின் கையை வெட்டி விட்டு, கெத்தாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட 3 ரவுடிகள் வழுக்கி விழுந்து கைகளை முறித்துக் கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரம் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது நண்பர் ராஜகோபால் நகரை சேர்ந்த யமஹா முருகன் என்பவருடன் மது அருந்துவது வழக்கம்.

அண்மையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லட்சுமணன், முருகனை அடித்ததாக கூறப்படுகின்றது. இதற்கு பதிலுக்கு பதில் கொடுக்க திட்டமிட்ட யமகா முருகன், சம்பவத்தன்று லட்சுமணனை நள்ளிரவில் ராஜகோபால் நகருக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து குடிக்கவைத்துள்ளார்.

லட்சுமணன் போதையில் தள்ளாடும் நிலைக்கு வந்ததும் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து லெட்சுமணனின் வலது கையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது வலது கை துண்டானது. அலறித்துடித்த லெட்சுமணனை தனியார் மருத்துவமனையில் சேர்த்து கையை ஒட்டவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி டி.எஸ்.பி.பிரகாஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த யமஹா முருகன் சிவசங்கர், ஹரிஹரன் ஆகியோர் டிக்டாக்கில் தங்களை பெரிய தாதாக்கள் போல பில்டப்புடன், தூத்துக்குடிக்கு மட்டுமல்ல, அகில உலகத்துக்கே தாங்கள் தான் சிங்கம் என கெத்தாக டிக்டாக் வீடியோவை பதிவிட்டது கண்டறியப்பட்டது.

ஒருவரின் கையை வெட்டியதோடு, தாதாக்கள் போல டிக்டாக்கும் பதிவிட்டதால் யமஹா முருகனின் கூட்டாளிகளை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பும் நோக்கில் சுவர் ஏறிக்குதிக்கும் போது 3 பேருக்கும் கைகளில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

டிக்டாக்கில் சவடால் பேசிய யமஹா முருகனுக்கு மட்டும் கூடுதலாக காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர், தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை காக்கும் பொருட்டு மனிதநேயத்துடன் அழைத்துச்சென்று கால் மற்றும் கைகளில் மாவுக்கட்டு போட்டு விட்டதாக கூறினர்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments