தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா உறுதி..!

0 5700

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 1515 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மலேசியா, கத்தாரில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 25 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 10 பேர் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக தமிழகம் திரும்பிய 59 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத விதத்தில் ஒரே நாளில் 49 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. அவர்களில் 35 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் மரணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது.

மொத்தம் உள்ள 79 ஆய்வகங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 ஆயிரத்து 242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும்1438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 20,706 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை 5 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகவில்லை. 12 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை 2444 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரையிலானவர்களில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 5664 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை உள்நாட்டு விமானங்கள் மூலம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்கள் வந்தவர்களில் இதுவரை 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களில் இதுவரை 215 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் ரயில் மூலம் தமிழகம் வந்தவர்களில் 327 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் சாலை மார்க்கமாக வாகனங்களில் வந்தவர்களில் 1575 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கடல் மார்க்கமாக துறைமுகம் வந்தவர்களில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments